தஞ்சாவூர்: தஞ்சாவூர் ரயிலடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆய்வு என்ற பெயரில் ஒரு சில கடைகளில் மட்டும் தொடர்ந்து சோதனை செய்வதை நிறுத்த வேண்டும். இடைத்தரகர்கள் மூலம் கட்டாய மாமூல் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும். ஊழியர்களை தரக்குறைவாக பேசி, கடைகளுக்கு ஆய்வுக்கு வந்த கரூர் மாவட்ட உதவி மேலாளர், அவருடன் தரகர்களாக வந்த விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சுழற்சி முறையில் பணியிட மாறுதல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜெ.ரமேஷ் தலைமை வகித்தார். சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் மாலதி சிட்டிபாபு ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்துப் பேசினார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் நிறைவுரை யாற்றினார். சிஐடியு மாவட்ட தலைவர் து. கோவிந்தராஜ், டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கே.வீரையன், மாவட்ட பொருளாளர் க.மதியழகன், மாநிலக்குழு ச.ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலாளர் எம்.குருமூர்த்தி வாழ்த்திப் பேசினர். சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கே.அன்பு, த.முருகேசன், மில்லர் பிரபு, தரைக்கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் மணிமாறன், பொருளாளர் ராஜா, டாஸ்மாக் ஊழியர் சங்க நிர்வாகிகள் வி.ஜி.கருணாநிதி, எஸ். ரவிச்சந்திரன், எம்.சரவணன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.