கும்பகோணம் அரசினர் கலை கல்லூரியில் மாணவ, மாணவிகளை சாதிய ரீதியாக பேசிய தமிழ்துறை பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள அரசினர் கலைக் கல்லூரியில் தமிழ் துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் ஜெயவாணி ஸ்ரீ. இவர், எம்.ஏ இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகளிடம் தொடர்ந்து அவதூறாகவும், சாதிய ரீதியாகவும் பேசி வருவதாக மாணவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
அதாவது, மாணவிகளிடம் நீங்கள் ஏன் கல்லூரிக்கு வருகிறீர்கள் குழந்தை பெற்றுக் கொண்டு வீட்டில் இருக்க வேண்டியதுதானே என்றும், மாணவர்களிடம் துணி துவைப்பவன், மாடு மேய்ப்பவன் எல்லாரும் கீழ் சாதியாக இருக்கத்தான் வேண்டும் என்றும் வன்மமான முறையில் பேசியதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், இந்திய மாணவர் சங்கம் தலைமையில் விவகாரம் குறித்து தமிழ் ஆசிரியரை நேரில் கேட்டதற்கு, அதற்கும் அந்த ஆசிரியர் அவமானப்படுத்தும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் முறையிட்டதற்கும், இரண்டு நாட்களுக்குப் பிறகு பேசிக் கொள்ளலாம் என அலட்சியமாக சொல்லியதாகவும் தெரிகிறது.
இதனால் ஆவேசமடைந்த மாணவர்கள், தமிழாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கம் தலைமையில், கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், வெள்ளிக்கிழமை (09.08.24) கல்லூரி மாணவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி கல்லூரி வாசலில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.