தஞ்சாவூர்:
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான விவசாயிகள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்துசெய்ய வேண்டும். வேளாண்மண்டல அதிகார அமைப்பில் விவசாயிகள் சங்க,விவசாயத் தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தா போன்றநிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கிய அனுமதியை மாநில அரசு ரத்துசெய்ய வேண்டும்.திருச்சி, கரூர், அரியலூர் மாவட்டங்களின் சிலபகுதிகளை ஒருங்கிணைந்த வேளாண் மண்டலத்தில் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை டெல்டா மாவட்டங்களில் அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை
காவிரி படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கம்சார்பில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர்கள் ஏ.ராமையன், எம்.கே.ஆரோக்கியசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொருளாளர் கே.பி.பெருமாள், மாநில துணைச் செயலாளர் த.இந்திரஜித் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கோரிக்கைகளை விளக்கி விவசாயிகள் சங்க தேசியக்குழு உறுப்பினர் மு.மாதவன், மாநில துணைச் செயலாளர் எஸ்.பொன்னுச்சாமி, மாவட்டச் செயலாளர் எஸ்.சி.சோமையா உள்ளிட்டோர் பேசினர்.
நாகப்பட்டினம்
காவிரிப் படுகைப் பாதுகாப்புக் கூட்டு இயக்கம் சார்பில் அனைத்து விவசாயிகள் சங்கங்கள் பங்கேற்ற கோரிக்கை ஆர்ப்பாட்டம் நாகப்பட்டினம் அவுரித்திடலில் புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சம்பந்தம் தலைமை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன் கோரிக்கைகளை விளக்கிச் சிறப்புரையாற்றினார்.விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத்துணைத் தலைவர் ஜி.ஸ்டாலின், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம்.என்.அம்பிகாபதி, வி.ச. நாகை ஒன்றியச் செயலாளர் என்.வடிவேல், வி.ச.வேதாரணியம் ஒன்றியச் செயலாளர் கோவை.சுப்பிரமணியம், விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் வி.சரபோஜி, லெனின் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
அரியலூர்
ஜெயங்கொண்டம் வட்டத்திலுள்ள ஓஎன்ஜிசி ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்திட வேண்டும், தா.பழூர் திருமானூர் பிள்ளை பாளையம் ஊராட்சி ஒன்றிய டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாய சங்கங்கள் இணைந்து நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் பெ. சண்முகம் தலைமையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு நடைபெற்றது.சிபிஎம் மாவட்டச் செயலாளர் மணிவேல், திமுக மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.மகாராஜன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் இளங்கோவன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி.பத்மாவதி உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர். முன்னதாக அண்ணா சிலையில் இருந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசும் டெல்டாவை வேளாண் மண்டலமாக அறிவித்திடுக: டி.ரவீந்திரன்
தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் அருகில்நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர்கள் (சிபிஎம்) என்.வி.கண்ணன், (சிபிஐ) பா.பாலசுந்தரம் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டத் தலைவர்கள் (சிபிஎம்) பி.செந்தில்குமார், (சிபிஐ) வீர மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க (சிபிஎம்) மாநிலத் துணைத் தலைவர் டி.ரவீந்திரன் பேசுகையில், “காவிரி டெல்டா பகுதிகளை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில்உள்ள குறைகள் சரிசெய்யப்பட வேண்டும். ஆனால் மத்திய அரசும் இதனை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவிக்க வேண்டும். இல்லையெனில், இதனால் பலனில்லை. மத்திய அரசுஇத்திட்டங்களை அமல்படுத்த நினைத்தால், மாநில அரசு ஏதும் செய்ய முடியாதவாறு நெருக்கடியை உருவாக்கும் என்று கூறினார்.திமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளரும், திருவையாறு சட்டப்பேரவை உறுப்பினருமான துரை.சந்திரசேகரன் ஆர்ப்பாட்டத்தைதொடங்கி வைத்துப் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் எம்.மாலதி, விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் எம்.பழனி அய்யா, ஞானமாணிக்கம், கணேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.