tamilnadu

img

கூட்டுப்பிரச்சாரம் - ஆக . 9ல் ஆர்ப்பாட்டம்

சென்னை:
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம், சிஐடியு பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன்,  அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகியோர் கூட் டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளனர். 

மத்திய பாஜக அரசாங்கத்தின் தேச விரோத,மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக, தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள்  அமைப்புகளின் கூட்டு கூட்டம் 5.7.2020 அன்று நடைபெற்றது. இக்கூட்டத் தில் ஜி.சுகுமாறன் (சிஐடியு), பெ.சண்முகம்(தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்), அமிர்தலிங்கம் (அ.இ.விவசாயத் தொழிலாளர் சங்கம்) ஆகியோர்  பங்கேற்றனர். கூட்டத்தில்  நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி,  கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், ஊரடங்கு மற்றும்   பாஜக அரசின் தொழிலாளர் விரோத - விவசாயிகள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக கூட்டு இயக்கம் நடத்துவது என்று சிஐடியு அகில இந்திய விவசாயிகள், விவசாயி தொழிலாளர் அமைப்புகள் தீர்மானித்துள்ள இயக்கங்களை தமிழகத்தில் வெற்றிகரமாக்குவது என்று முடிவு செய் யப்பட்டது. கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய பிஜேபி அரசு ஊரடங்கைப் பயன்படுத்திக்கொண்டு, நவீன தாராளமயக் கொள்கைகளை  தீவிரப்படுத்தி  பொதுத்துறை நிறுவனங் களை முற்றிலுமாக அழிக்கும் விதத்திலும் முக் கியமான மற்றும் கேந்திரமான துறைகளிலும் அந்நிய நேரடி முதலீட்டை தாராளமாக அனுமதித் திடும் நடவடிக்கைகளை வேகப்படுத்தி வருகிறது.அனைத்துத் தொழிலாளர் நலச் சட்டங்களையும்  முதலாளிகளுக்கு சாதகமாக திருத்தங்கள் செய்து  தொழிலாளர்களை அடிமைகளாக மாற்றவும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதையும், வேலையிலிருந்து வெளியேற்றக்கூடாது என்பதிலும் மத்திய அரசு தனது பொறுப்பிலிருந்து விலகி சென்றுள்ளது.  முதலாளிகள் அமைப்புகளின் வேண்டுகோளை ஏற்று 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக்குவதற்கு பாஜக ஆளும் அரசுகள் முயற்சிகள் மேற்கொண்டன.

விவசாயத் தொழிலில்  விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வை நாசமாக்கும் விதத்திலும், அவசரச் சட்டங்கள் மூலமாக நிலக் கார்ப்பரேட்டுகளை உருவாக்குவதற்கும், உணவுப் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் விதத்திலும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப் படுத்துவதற்கும் நோய் தொற்றிலிருந்து மக் களை பாதுகாப்பதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும், மருத்துவ உபகரணங்கள் போதிய அளவிற்கு வழங்குவதற்கும் மாநில அரசுக்கு போதுமான நிதி அளிக்க மறுத்து வருகிறது.   ஊரடங்கினால்  வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நிவாரண உதவிகள் செய்வதற்கும் அக்கறை செலுத்தாமல் மக்களின் உணர்வுகளை திசைதிருப்பும் வேலையில் ஈடுபட்டு வருகிறது.

அதே வேளையில் மத்திய அரசை மட்டும் நம்பியிராமல் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்திட சிறப்பான முறையில் நடவடிக்கைகளை   கேரளா இடது ஜனநாயக முன் னணி அரசாங்கம் எடுத்து வருகிறது. ஊரடங்கினால் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கான முறையான ஏற்பாடுகளை செய்ய தவறியது. வெளிநாடுகளில் உள்ளதமிழர்களை சொந்த ஊருக்கு அழைத்து வருவதற் கான ஏற்பாடுகளை செய்ய மறுத்து வருகிறது.

கூட்டுப்பிரச்சாரம்
கொரோனா ஊரடங்கினால் மத்திய அரசுக்கு எதிராக மக்கள் மத்தியில்  அதிருப்தி அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக சிஐடியு உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள், தொழில்வாரி சம்மேளனங்கள் நடத்தியுள்ள இயக்கங்களில்  மக்கள் பங்கெடுப்பதில் நன்கு பிரதிபலிக்கிறது.இத்தகைய நிலைமையில், தொழிலாளர் கள்-விவசாயிகள்-விவசாயத் தொழிலாளர்கள் ஆகியோர் இணைந்து ஒன்றுபட்டுப் போராட வேண்டியுள்ளது.   இத்தகைய போராட்டங்களை அனைத்து மட்டங்களிலும், குறிப்பாக கிராம அளவிலும் போராட்டங்களை நடத்த வேண்டியது அவசியம் என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.மேலும் மக்களின் சுகாதாரம், உணவு, வருமானம் மற்றும் வேலை வாய்ப்பு உட்பட இதர கோரிக்கைகளையும் முன்வைத்து மாநிலந் தழுவிய  கூட்டுப் பிரச்சாரத்தை மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கிறது.

கோரிக்கைகள்

1) நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் இலவசமாக சுகாதாரப் பாதுகாப்பை உத்தரவாதம் செய்திட வேண்டும்.

2) ஒவ்வொரு நபருக்கும் ஒரு மாதத்திற்கு 10 கிலோ உணவு தானியங்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு இலவசமாக வழங்கிட வேண்டும்.

3) வருமானவரி வரம்புக்குள் வராத அனைத் துக் குடும்பங்களுக்கும் மாதத்திற்கு 7,500 ரூபாய் வீதம் அடுத்த ஆறு மாதங்களுக்கு அளித்திட வேண்டும்.

4) மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் கீழ், 200 நாட்கள் வேலை வழங்கிட வேண்டும். இதற்கான ஊதியம் நாளொன்றுக்கு 600 ரூபாய் என நிர்ணயம் செய்திட வேண்டும். அல்லது வேலையில்லாதோருக்கான ஊதியம் அளித்திட வேண்டும். நகர்ப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் கொண்டுவரப்பட்டு அமல்படுத்தப்பட வேண்டும். 

5) அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தை ரத்து செய்வதற்காகவும், பண்ணை வர்த்தகம், மின்சார சட்டம் மற்றும் தொழிலாளர் சட்டங்கள் தொடர்பாகவும் கொண்டுவந்துள்ள அவசரச் சட்டங்கள்/நிர்வாக உத்தரவுகளை ரத்து செய்திட வேண்டும்.

6)  நுண்நிதி நிறுவனங்கள் சுயஉதவிக்குழுக் கள் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பெற்றுள்ள கடன் தவணை வசூல் அனைத்தையும் ஒத்திவைத்திட வேண்டும்.

7) புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சனைகளை முன்னுரிமை அடிப்படையில் தீர்த்திட வேண்டும்.

இக்கோரிக்கைகளின் மீது  2020 ஜூலை மாதம் முழுவதும்  கிராம அளவில் கூட்டுப் பிரச்சாரங் களை நடத்திட வேண்டும். 2020 ஆகஸ்ட் 9 அன்று மாநிலம் முழுவதும் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அளவில் தொழிலாளர்கள்-விவசாயிகள்-விவசாயத் தொழிலாளர்களை அணிதிரட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.