tamilnadu

img

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு

தஞ்சாவூர்:
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி3 ஆவது மாநில மாநாடு வியாழக்கிழமை அன்று எழுச்சியுடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. தஞ்சாவூர் (ஜெயராம் மஹால்) தோழர்அசோக் நினைவரங்கில் நடைபெற்ற மாநில நாட்டு முதல் நிகழ்வாக அணையாத நினைவுகளை சுடராய் பெற்றுக் கொள்ளும்நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வுக்கு இந்தியமாணவர் சங்க மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் தலைமை வகித்தார். 

வெண்மணியில் இருந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாகை மாவட்டச் செயலாளர் நாகை மாலி துவக்கி வைத்து, கொண்டுவரப்பட்ட வெண்மணி தியாகிகள் சுடரை, மாநில துணைத் தலைவர் ஜி.ஆனந்தனிடமிருந்து, வி.தொ.ச மாநிலப் பொதுச்செயலாளர் வி.அமிர்தலிங்கமும், தோழர் அசோக் நினைவாக திருநெல்வேலியிலிருந்து,  மாநிலதுணைத் தலைவர் ஆர்.கிருஷ்ணன் துவக்கிவைத்து கொண்டு வரப்பட்ட சமூகநீதிசுடரை, மாநில துணைப் பொதுச் செயலாளர்ஆர்.செல்லக் கண்ணுவிடமிருந்து, மாநில துணைத் தலைவர் ஆர்.சிங்காரவேலுவும் பெற்றுக் கொண்டார். 

ராயமுண்டான்பட்டியில் இருந்து சிபிஎம் தஞ்சை மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் துவக்கி வைத்து, எடுத்து வரப்பட்டதோழர் என்.வெங்கடாசலம் நினைவுச் சுடரை,மாவட்டத் தலைவர் கே.அபிமன்னனிடமிருந்து, பெபி  மாநிலச் செயலாளர் எஸ்.ஏ.ராஜேந்திரனும், நந்தீஸ், சுவாதி நினைவாக ஓசூரில்இருந்து, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர் பி.டில்லிபாபு துவக்கிவைத்து, கொண்டு வரப்பட்ட சாதி ஆணவப் படுகொலை ஒழிப்பு சுடரை, மாநிலச் செயலாளர் மு.கந்தசாமியிடமிருந்து பிஎஸ்என்எல் எல்இயு மாநிலத் தலைவர் எஸ்.செல்லப்பாவும் பெற்றுக் கொண்டார். 

அரியலூரில் இருந்து நந்தினி, அனிதா நினைவாக, ஜனநாயக மாதர் சங்க மாநிலத்தலைவர் எஸ்.வாலண்டினா துவக்கி வைத்து, எடுத்து வரப்பட்ட கல்வி உரிமைச் சுடரை,மாநில துணைத் தலைவர் எம்.சின்னத்துரையிடம் இருந்து, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, இந்திய ஜனநாயக வாலிபர்சங்க மாநிலச் செயலாளர் எஸ்.பாலா முன்மொழிய, “சாதியம் தகர்ப்போம்” என திரண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் உறுதிமொழி ஏற்றனர். பின்னர் அரங்கில் தொடங்கிய மாநாட்டுநிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவர் பி.சம்பத்தலைமை வகித்து பேசினார். வரவேற்புக்குழு தலைவர் இயக்குநர் ராஜூ முருகன் வரவேற்றார். மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் யு.கே.சிவஞானம் அஞ்சலி தீர்மானம் முன்மொழிந்தார். முன்னாள் நீதியரசர் கே.சந்துரு மாநாட்டு தொடக்கவுரையாற்றினார்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர்தொல்.திருமாவளவன் எம்.பி., மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மூத்த மனித உரிமை செயற்பாட்டாளர் வழக்கறிஞர் ஹென்றி டிபேன், தமிழ் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன், சசி- பாண்டியன் உள்ளிட்ட தோழமை அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டில் களமும் இலக்கும் செயல்பாட்டு அறிக்கை குறித்து மாநில பொதுச்செயலாளர் கே.சாமுவேல் ராஜ், டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலை வாய்ப்பு மைய அறிக்கை குறித்து மாநிலச்செயலாளர் கே.சுவாமிநாதன், வரவு செலவுஅறிக்கை தாக்கல் செய்து மாநிலப் பொருளாளர் த.செந்தில்குமார் ஆகியோர் பேசினர். 

சுபாஷினி அலி பங்கேற்பு
இரண்டாம் நாளான வெள்ளியன்று மாநாட்டை வாழ்த்தி தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணியின் துணைத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுபாஷினி அலி உரையாற்றினார். மக்கள் விடுதலை கட்சி தலைவர் சு.கா.முருகவேல் ராசன், ஆதித் தமிழர் பேரவைதலைவர் இரா. அதியமான், ஒடுக்கப்பட்ட வாழ்வுரிமை இயக்க பொதுச் செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்டோர் வாழ்த்துரை நிகழ்த்தினர். 

தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் 
மாநாட்டின் முதல் நாள் புதன்கிழமை இரவு, தஞ்சை நகரில் மாநாட்டு அரங்கம் அருகில் கொடி, தோரணங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ஜனநாயகவாலிபர் சங்க, மாணவர் சங்க நிர்வாகிகளை, தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் தலைமையில்வந்த காவல்துறையினர் மிரட்டி, அச்சுறுத்தி,கொடி, தோரணம், பேனர் உள்ளிட்ட பொருட்களை பறித்து சென்றதோடு, சில தோழர்களையும் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். காவல்துறை கண்காணிப்பாளரின் இத்தகைய அத்துமீறல் குறித்து தமிழ்நாடுதீண்டாமை ஒழிப்பு முன்னணி தன்னுடைய கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

படவரிசை: 

1.தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாட்டின் வரவேற்புக் குழு தலைவராக செயலாற்றிய திரைப்பட இயக்குநர் ராஜூ முருகனை தலைவர்கள் கவுரவித்தனர். அப்போது, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செயல்பாட்டை கவுரவிக்கும் விதமாக, மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் ஆகியோர் விவாதிப்பது போன்ற ஓவியத்தை, இயக்குநர் ராஜூ முருகன்,    கே.பாலகிருஷ்ணன், தொல். திருமா வளவன் எம்.பி., பி.சம்பத், கே.சாமுவேல்ராஜ் உள்ளிட்ட தலைவர்களிடம் அளித்தார்.

2.டாக்டர் கண்ணகி பழனிசாமி தயாரித்து பாடிய, மஞ்சணத்தி மனசுக்குள்ளே ஒலிப்பேழையை தமுஎகச ஆதவன் தீட்சண்யா வெளியிட, இயக்குநர் ராஜூ முருகன் பெற்றுக் கொண்டார்.

3.தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டில், ஆனந்த் டெல்டும்டே எழுதி, சுப்பாராவ் தமிழில் மொழி பெயர்த்த ‘சாதியின் குடியரசு’ என்ற நூலை அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர் வெளியிட ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் பெற்றுக் கொண்டார்.