தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ரவி கலந்துக்கொண்ட பட்டமளிப்பு விழாவில், எஸ்.எஃப்.ஐ மாநில தலைவர் கோ.அரவிந்தசாமி-யை பட்டம் பெற விடாமல் கைது செய்த காவல்துறையை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இன்று காலை தஞ்சை டி.ஐ.ஜி அலுவலத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி-க்கு கருப்புக் கொடி காட்டுவார் என அவர்களாகவே நினைத்துக் கொண்டு பாதுகாப்பு என்ற பெயரில் பட்டம் பெற சென்ற மாணவரும், எஸ்.எஃப்.ஐ மாநில தலைவருமான கோ.அரவிந்தசாமி-யை, அவர் படித்து பெற்ற வெள்ளி பதக்கம் மற்றும் பட்டம் பெற விடாமல் தடுத்து, ஆடைகளை களையச் செய்து விசாரணை என்ற பெயரில் தனியாக அடைத்து வைத்திருந்து மனித உரிமை மீறலில் ஈடுபட்டனர். இந்த சூழலில், தஞ்சை காவல்துறையை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் இன்று காலை 10 மணிக்கு தஞ்சை காவல்துறை டி.ஐ.ஜி அலுவலத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், காவல் துறையின் தடையை தகர்த்தெரிந்து மாணவர்கள் டிஐஜி அலுவலகத்திற்குள் புகுந்தனர். காவல்துறை வலுகட்டாயமாக, அராஜகமான முறையில் மாணவர்களை கைது செய்தது.