தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் பெண் காவலருக்கு, பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் காவலர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டார். தஞ்சாவூர் ஆயுதப்படையில் பணியாற்றி வரும் பெண்காவலர் ஒருவர், அய்யம் பேட்டை காவல்நிலையத்திற்கு பணிக்காக சென்றிருந்தார். அப்போது அங்கு பணியாற்றி வரும், காவலர் முருகானந்தம் (29) என்பவர் அவருக்கு பலவகையிலும் உதவி செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு இரவு, பெண் காவலருடன் பேசிக் கொண்டிருந்த, முருகானந்தம் அவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் பெண் காவலர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண் காவலர் அளித்த புகாரின் பேரில், அய்யம்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்தனர். இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய், முருகானந்தத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.