தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தெற்கு ஒன்றியம் செங்கிப்பட்டியில், டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து சிஐடியு சார்பில் ஆட்டோ, டாடா ஏசி வாகன ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் சானூரப்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு கிளைச் செயலாளர் என்.எஸ்.கே.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், சிபிஎம் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர், முறைசாராத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.என்.பேர் நீதி ஆழ்வார், சுமைப்பணி சங்க மாவட்டச் செயலாளர் த.முருகேசன், சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.விஜயகுமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
எல்ஐசி முகவர் சங்கம் சோலை.ரமேஷ், மாதர் சங்கம் ஒன்றியத் தலைவர் எஸ்.மலர்கொடி, வாலிபர் சங்க ஒன்றிய துணைச் செயலாளர் தமிழ்செல்வன் மற்றும் ஆட்டோ, கார், வேன், டாடா ஏசி ஓட்டுநர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தங்கள்ஆட்டோ, டாடா ஏசி வாகனங்களை கயிறு கட்டி இழுத்து சென்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை பொதுமக்கள் ரசித்தபடி சென்றனர்.
காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சிசார்பில் ரயிலடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை வகித்தார். தஞ்சாவூர்மாநகர காங்கிரஸ் சார்பில் சிவகங்கை பூங்காவிலிருந்து கீழவாசல் வரை, கேஸ் சிலிண்டர் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு மாலை அணிவித்து பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர செயலாளர் பி.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். பாபநாசம் கடைவீதியில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் டி.ஆர்.லோகநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.