tamilnadu

img

குடியிருப்புகளை அகற்றும் முயற்சிக்கு எதிர்ப்பு சுடுகாட்டில் குடியேறப் போவதாக மக்கள் அறிவிப்பு

தஞ்சாவூர் அக்.14- பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் பொதுமக்களை அப்புறப் படுத்த நடக்கும் முயற்சியை கை விடக் கோரி சுடுகாட்டில் குடியேறப் போவதாக பொதுமக்கள் வேதனை யுடன் தெரிவித்துள்ளனர்.  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை நகராட்சிக்குட்பட்ட 30 ஆவது வார்டு, பண்ணைவயல் சாலை- சிவக் கொல்லை பகுதியில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சார்ந்த 1000 க்கும் மேற்பட்டோர் 50 ஆண்டு களுக்கும் மேலாக குடியிருந்து வரு கின்றனர்.  இந்நிலையில், இந்த இடம் மன்னர் ஆட்சிக் காலத்திலிருந்து தங்களுக்கு சொந்தமானது. இதற்கான நீதிமன்ற உத்தரவு இருக்கிறது. ஆகவே தனக்கு சொந்தமான இடத்தைக் காலி செய்து தரவேண்டும் எனக் கூறி  தனியார் அறக்கட்டளை நிர்வாகி ஒரு வர், காவல்துறை, நீதித்துறை அலு வலர்களுடன் வந்து, குடியிருப்புவாசி களை வெளியேறும்படி தெரிவித்த தாக கூறப்படுகிறது.  இதனால் அதிர்ச்சி அடைந்த இப் பகுதி பொதுமக்கள், குடியிருப்போர் நலச்சங்க தலைவரும், முன்னாள் நகர மன்ற உறுப்பினருமான வெள்ளைச் சாமி தலைமையில், 300 பெண்கள் உள்பட சுமார் 500 பேர் திங்கள்கிழமை அன்று பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு, தங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை திரும்ப ஒப்படைக்கப் போவதாகக் கூறி போராட்டம் நடத்துவதற்காக திரண்டனர்.  இதைத்தொடர்ந்து வருவாய்த் துறையினர், காவல்துறையினர் குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதி களை சார் ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்ப ராஜிடம் அழைத்து சென்றனர். அவர் களிடம் பிரச்சனை குறித்து கேட்டறிந்த சார் ஆட்சியர், “நீதிமன்ற உத்தரவை மீறி தம்மால் எதுவும் செய்ய முடியாது. எனவே நீதிமன்றத்தை அணுகுமாறு” சொன்னதாக கூறப்படுகிறது. இதை யடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறினர்.  இதுகுறித்து சிவக்கொல்லை பகுதி மக்கள் கூறுகையில், “50 ஆண்டு களுக்கும் மேலாக குடியிருந்து வரு கிறோம். 30 ஆண்டு வில்லங்கம் போட்டு பார்த்து விட்டு தான் இடம் வாங்கி னோம். அரசு குடியிருக்கும் இடத்திற்கு பட்டா வழங்கி உள்ளது. வீட்டு வரி, சொத்து வரி செலுத்தி வருகிறோம். மின் இணைப்பு, குடி நீர் இணைப்பு பெற்றுள்ளோம். இந்த நிலையில் இடம் எங்களுக்கு சொந்தமானது என தனியார் அறக்கட்டளை சொல்லு கிறது. அரசு உரிய நடவடிக்கை எடுத்து எங்களை காக்க வேண்டும். இல்லா விட்டால் பிள்ளைகளுடன் சென்று சுடு காட்டில் தான் குடியேற வேண்டும்” எனக் கண்ணீர் மல்க தெரிவித்தார்.