தஞ்சாவூர், மே 16-தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டிமாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் நேற்றுமுன்தினம் காலை முன்னாள் பங்கு தந்தையர் லூர்துசேவியர் மற்றும் ராயப்பர் ஆகியோரின் நினைவுத் திருப்பலி பூசை நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி திருவிழா கூட்டுத்திருப்பலி பூஜையை நடத்தி மறையுரையாற்றி ஆசி வழங்கினார். இரவு அலங்கரிக்கப்பட்ட பூண்டி அன்னையின் அலங்கார, ஆடம்பர தேர் பவனியை குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி புனிதப்படுத்தி துவக்கி வைத்தார். விழாவை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வாணவேடிக்கைகள் நடந்தன. தேர்பவனியில் குடந்தை மறைமாவட்ட முன்மைகுரு அமிர்தசாமி, மைக்கேல்பட்டி மறை வட்ட முதன்மை குரு அந்தோனிஜோசப், பூண்டிமாதாபேராலய அதிபரும் பங்கு தந்தையுமான பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், பூண்டி மாதா தியான மையஇயக்குநர் குழந்தைராஜ், உதவி தந்தைகள் ஜேம்ஸ், ஜெயன், ஆன்மீக தந்தைகள் அருளானந்தம், இருதயம்அருள் உள்ளிட்ட ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பேராலய அதிபரும் பங்கு தந்தையுமான பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ் செய்தனர். 15ம் தேதி காலை ஆயர் தலைமையில் நடைபெற்றதிருப்பலி பூஜையில் சுற்றுவட்ட பங்கு குருமார்கள், இறைமக்கள் கலந்து கொண்டனர். மாலை கொடியிறக்கம் நடைபெற்றது.