தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அடுத்த பிள்ளையார்பட்டியில் வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை உள்ள இடத்துக்கு வெளிநபர்கள் செல்ல முடியாதபடி காவல்துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளதோடு, அந்த பகுதியில் ஏராளமான காவலர்கள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.பிள்ளையார்பட்டியில் கடந்த 3-ம் தேதி நள்ளிரவு மர்ம நபர்கள் அங்குள்ள திருவள்ளுவர் சிலை மீது மாட்டு சாணம் வீசிஅவமதித்தனர். இதையடுத்து அங்கு பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக் கழக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து,சிசிடிவி காட்சியினை கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதற்கிடையில் மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி, திராவிடர் கழகம், திமுக, மதிமுக, கம்யூ னிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டோர் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும், திருவள்ளுவர் சிலைக்குகடந்த 5ஆம் தேதி பாஜகவினர் பாலபிஷேகமும், 6-ம் தேதி இந்து மக்கள் கட்சியினர் ருத்ராட்சமாலை, காவி உடை அணிவித்தனர். இந்த செயல் பல்வேறு தரப்பினரிடம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.இதுகுறித்து பிள்ளையார்பட்டி கிராம நிர்வாக அலுவலர் வாசுதேவன் கொடுத்த புகாரின் பேரில், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியாக இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன்சம்பத் உள்ளிட்ட மூவரை கைது செய்து பின்னர் விடுவித்தனர்.இதையடுத்து பிள்ளையார்பட்டியில் 100-க்கும் மேற்பட்டகாவலர்கள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை இருக்கும் பகுதிக்கு யாரும் செல்ல முடியாக வகையில் அங்கு காவல்துறையினர் இரும்பு தடுப்புகளை அமைத்துள்ளனர். பிள்ளையார்பட்டியின் கடைவீதியிலும் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளுவர் சிலை இருக்கும் தெருவுக்குள் வெளிநபர்கள் யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அந்த தெருவில் உள்ளவர்களையும் மிகுந்த சோதனைக்கு பிறகே அனுமதித்தனர்.இதற்கிடையில் வியாழக்கிழமை காலை தஞ்சாவூர் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர் திருவள்ளுவர் சிலை இருக்கும் இடத்தினை பார்வையிட்டு, அங்கு நிரந்தரமான தடுப்புகள் ஏற்படுத்திடவும், சிலையை பாதுகாப்பாக இரும்பு கூண்டுக்குள் வைக்கும் பணி தொடங்கியது.திருவள்ளுவர் சிலை உள்ள திருவள்ளுவர் தெருவிற்கு கூட பத்திரிகையாளர் உள்ளிட்ட வெளி நபர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை.இதுகுறித்து தஞ்சாவூர் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் கூறியதாவது: பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை மீது இனி வருங்காலத்தில் விஷமிகள் யாரேனும் எந்த தவறும் செய்யக் கூடாது என்பதற்காக மேற்கூரையும், சிலையை சுற்றி இரும்பு கிரில் கம்பிகள் அமைக்கப்படவுள்ளது. அதே போல் பூட்டு போட்டு பூட்டி வைக்கப்படவுள்ளது. ஏதாவது நிகழ்ச்சி என்றால் சிலைக்கு மாலை அணிவிக்க திறந்துவிடப்படும். மற்ற நாட்களில் சிலை பாதுகாப்பாக பூட்டி வைக்கப்படும். இதன் சாவி சிலையை நிறுவிய அந்த தெருவாசிகளிடம் ஒப்படைக்கப்படும்” என்றார்.