தஞ்சாவூர்:
குடிநீரை தனியார் மயமாக்கி, கட்டணம் வசூலிக்கும் மத்திய அரசின் மக்கள் விரோதசெயல்பாட்டைக் கண்டித்து, தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் ஆக.4 அன்று அனைத்துஊராட்சிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் தெரிவித்ததாவது:- மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் பேரில்கிராம ஊராட்சிகளில் தற்போது உள்ள குடிநீர்விநியோக முறையை மாற்றி, கட்டணம் செலுத்தி குடிநீர் பெறும் நிலையை ஏற்படுத்தும்வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும், ஒரு பகுதி ஊராட்சிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த முனைந்திருக்கிறார்கள். இதன் மூலம் குடிநீர் இணைப்புக்கு முன்பணமாக ரூ 3000 செலுத்துவது, முதல் தவணையாக ரூ.1000 செலுத்த நிர்பந்திக்கிறார்கள்.
குடிநீர் இணைப்புக்கு மீட்டர் பொருத்துவதும், பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணம் செலுத்தும் விதமான நிலை ஏற்படுகிறது. இதன் மூலம் கிராமங்களில், நகரங்களில் உள்ள இலவச குடிநீர் வினியோகம் முற்றாகரத்தாகும் நிலை ஏற்படும். எனவே, “கொரோனாஊரடங்கு காலத்தில் வருமானம் இன்றி தவிக்கும் குடும்பங்களின் நிலை கருதி குடிநீர் இணைப்புக்கு கட்டணம் வசூலிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும். குடிநீருக்கு மீட்டர் பொருத்தி கட்டணம் வசூலிக்கும் முறையை ஏற்படுத்தாதே. அனைவருக்கும் இலவசமாக குடிநீர் வழங்கிடும் முறையை உறுதி செய்திடுக” என வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 4 அன்று மாவட்டம் தழுவிய அளவில் ஒன்றிய அலுவலகம் மற்றும் அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தர வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.