கடலூர் ஆட்சியர் தலையிட சிபிஎம் கடிதம்
கடலூர், ஏப்.10- கடலூர் மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள் கட்டாய தவணை வசூலைச் செய்து வருவதால் மாவட்ட ஆட்சியர் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியருக்குக் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம் எழுதியிருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காகப் போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் மத்திய, மாநில அரசுகள் அறிவித்த பல்வேறு திட்டங்கள் இதுவரை முழுமையாக மக்களுக்குச் சென்று அடையவில்லை. சரிபாதி ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படாத நிலை உள்ளது. பொறுக்கி வழங்கிய ஒரு சில கடைகளிலும் போதிய அளவு வழங்கப்படவில்லை. எனவே போர்க்கால அடிப்படையில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முறைசாரா தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ரேஷன் பொருட்கள் மற்றும் நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் பயிரிட்டு உள்ள 2.75 லட்சம் டன் கரும்பை வெட்டுவதற்கும் வ அரவைச் செய்வதற்கும் நெல்லிக்குப்பம் இஐடி பாரி சர்க்கரை ஆலையை இயக்க வேண்டும். ஸ்ரீராம், பஜாஜ் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் தவணை தொகையைக் கட்டாயம் செலுத்த வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்து வருகிறது. இதனை மூன்று மாத காலம் தள்ளி வைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.