tamilnadu

img

கும்பகோணம் தோழர் சந்திரா காலமானார் 

கும்பகோணம், மே 26-தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகாவின் வடபகுதியில் உள்ள தேவனாஞ்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதுவக்கிய போது முதல் செயலாளராக தேர்வு செய்யப்பட்டவர் தோழர்எஸ்.வீரமுத்து. எஸ்.வி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட அவர், சாதிய ஒடுக்குமுறை, தீண்டாமை கொடுமை, நிலஉடமையாளர்கள் ஆதிக்கத்திற்கு எதிராக எண்ணற்றபோராட்டங்களை நடத்தியவர். அந்த போராட்டங்களில் அவரோடு களம் கண்ட அவரது மனைவி தோழர் சந்திராவெள்ளிக்கிழமை காலமானார்.இவர்களின் பிள்ளைகளுக்கு சைனா, செங்கொடி, ரணதிவே என்று பெயர் சூட்டினார். ஏவிஎன் எஸ்டேட் என்று அழைக்கப்பட்ட ஏ.வி.நவநீதகிருஷ்ணன் எனும்நில உடமையாளருக்கு எதிராக போராடி ஊருடையா நத்தம் கிராம தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலம்எடுத்து கொடுக்கப்பட்டது. தேவனாஞ்சேரி தாழ்த்தப் பட்ட மக்கள் சடலத்தை பொதுபாதையில் எடுத்து செல்லப்பட்ட போது ஆதிக்க சக்தியினரால் கடுமையான தாக்குதலுக்குள்ளாகி இரண்டு கால்களும் செயலிழந்த நிலையில் தனது மனைவி சந்திராவை கட்சிப்பணியில் ஈடுபடுத்தி சுதந்திரமாக செயல்பட வைத்தவர். தோழர் சந்திரா எழுந்து நடமாட முடியாத கணவரையும், மூன்று குழந்தைகளையும் வறுமையோடு போராடிவளர்த்துக் கொண்டே கட்சிப் பணிகளில் மிக தீவிரமாக செயல்பட்டவர். ஒன்றுபட்ட தஞ்சை மாவட்ட தலைவர்கள் பி.எஸ்.தனுஸ்கோடி, கோ.பாரதிமோகன், எம்.செல்லமுத்து, கோ.வீரய்யன், என்.சீனிவாசன், ஆர்.சி.பழனிவேலு உள்ளிட்ட தலைவர்களின் அன்பிற்குரியவர்.கும்பகோணம், திருவிடைமருதூர், வலங்கைமான், பாபநாசம் தாலுகாக்களில் மாதர் சங்க பணிகளை சிறப்பாக செய்தவர். தாலுகா ஒன்றிய மாவட்ட பொறுப்புகளை ஏற்று திறம்பட செயல்பட்டவர். மார்க்சிஸ்ட் கட்சிதோழர்களால் அன்போடு அம்மா என்று அழைக்கப் பட்ட தோழர் சந்திரா மறைவு தகவலறிந்து மாவட்ட, மாநில மார்க்சிஸ்ட் கட்சியின் தோழர்கள், மாதர் சங்கத்தினர், தோழர் சந்திரா உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்திசெவ்வணக்கம் செலுத்தினர்.