tamilnadu

img

கல்லணை சீரமைப்பு தூர்வாரும் பணிகள்.... முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு...

தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளையும், ஆறு, வாய்க்காலில் நடைபெறும் தூர்வாரும் பணிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.காவிரி டெல்டா மாவட்டங்களில்பாசனத்துக்காக மேட்டூர் அணைஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் ரூ.65.10 கோடி மதிப்பீட்டில் 647 பணிகள் 4,061 கி.மீட்டர் தூரத்துக்கு நடைபெற்று வருகிறது.பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் முன்பாக, தூர்வாரும் பணிகள் எப்படி நடைபெற்றுள்ளது என்பதை நேரில் ஆய்வு செய்வதற்காக வெள்ளிக்கிழமை காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு தனி விமானத்தில் வந்தார்.

கல்லணை சீரமைப்பு
பின்னர் திருச்சியிலிருந்து கார் மூலம் கல்லணைக்கு வந்த முதல்வர், கல்லணையில் காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகிய ஆறுகளின் தலைப்பு பகுதிகளில் நபார்டு வங்கி நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.122 கோடியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றுள்ளதை முதலில் ஆய்வு செய்தார்.தொடர்ந்து, காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும்திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். அவரிடம் நீர்ப்பாசனத்துறை கூடுதல் செயலாளர் சந்தீப் சக்சேனா, மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் ஆகியோர் பணிகளின் தன்மைகளை எடுத்துக் கூறினர்.

பின்னர் கல்லணை ஆய்வு மாளிகையில், பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, சிவசங்கர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மெய்யநாதன், அரசு கொறடா கோவி. செழியன், எம்பிக்கள், எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், திருச்சி என்.சிவா, சு.திருநாவுக்கரசர், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டிஆர்பி.ராஜா ஆகி யோர் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் இதுவரை நடந்துள்ள பணிகள், தற்போது நடைபெறும் பணிகளின் தன்மைகள் குறித்து முதல்வரிடம் அதிகாரிகள் எடுத்துக் கூறினர்.

தூர்வாரும் பணி
பின்னர் வல்லம் அருகே உள்ள முதலைமுத்து வடிகால் வாரியில் ரூ.40 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டுள்ளதையும், தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் வெண்ணாற்றில் ரூ.17 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டுள்ளதையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.தூர்வாரும் பணிகள் நடைபெற்ற இடங்களில் எம்பிக்கள் செ.ராமலிங்கம், சண்முகம், எம்எல்ஏக்கள் டிகேஜி.நீலமேகம், சாக்கோட்டைக.அன்பழகன், க. அண்ணாதுரை, என்.அசோக்குமார், பூண்டி கலைவாணன், நிவேதாமுருகன், ஜவாஹிருல்லா, ஆரூர் ஷாநவாஸ் உள்ளிட்டோர் முதல்வர் வந்த போது வரவேற்றனர்.முதல்வர் வருகையையொட்டி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

திருச்சியில்...
பின்னர் வல்லம், பள்ளிக்கரணை ஆகிய இடங்களில் குடி மராமத்து பணிகளை ஆய்வு செய்தார்.அங்கிருந்து கார் மூலமாக திருச்சிவந்தடைந்த முதல்வர் குழுமணி உய்யகொண்டான், கலிங்கு புலிவலம், மணற்போக்கி வடிகால் வாய்க்காலில் தூர்வாரும் பணியினை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.நீர்வள ஆதாரத்துறை, திருச்சி ஆற்றுப்பாதுகாப்பு கோட்டத்தின் கட்டுப்பாட்டின்கீழ் பாசன ஆதாரங்களில் திருச்சி மாவட்டத்திலுள்ள 20 பணிகளுக்கு ரூ.177.30லட்சம் மதிப்பீட்டில் 66.11 கிமீ தூரம் வரை தூர்வார வழிவகை செய்யப்பட்டுள்ளது.  ஸ்ரீரங்கம் வட்டம்,கொடியாலம் மற்றும் புலிவலம் கிராமம், புலிவலம் மணற் போக்கியிருந்துசெல்லும் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்பட வேண்டும்என விவசாயிகள் முக்கிய கோரிக்கை விடுத்திருந்தனர்.  விவசாயிகளின் கோரிக்கையின்படி மேற்படி புலிவலம் மணற்போக்கி வடிகால்வாய்க்கால் எல்.எஸ் 100மீ முதல் 1200மீ வரை தூர்வாரும் பணிக்கு ரூ.29.70 லட்சம் மூன்று பணிகளுக்குநிதி ஒதுக்கீடு பெறப்பட்டது. இந்நிதியின்கீழ் தற்போது தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. முதல்வரின் ஆய்வின் போது பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப்சக்சேனா, அமைச்சர்கள் துரைமுருகன் கே.என்.நேரு, மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, ஸ்டாலின்குமார்,இனிகோ இருதயராஜ்,கதிரவன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.