tamilnadu

நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் மீதான தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்க.... மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் வேண்டுகோள்....

தஞ்சாவூர்:
கடந்த அரசு கடைப்பிடித்த ஆசிரியர்-மாணவர்கள் விரோதப் போக்கை சுட்டிக்காட்டியமைக்காக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான தற்காலிக பணி நீக்கத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று கோரி தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கழகம் சார்பில் பள்ளிக்கல்வி ஆணையருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்த அமைப்பின்மாநிலத் தலைவர் மா. ரவிச்சந்திரன், பள்ளிக்கல்வி ஆணையருக்குஅனுப்பியுள்ள கடிதம் வருமாறு:பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகளின் படி ஜாக் டோ - ஜியோபோராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு கடந்த அரசால் வழங்கப்பட்ட தண்டனைகளை ரத்து செய்து பணிக் காலமாக மாற்றி அரசாணையை பிறப்பித்த முதல்வருக்கு எமதுஅமைப்பின் சார்பாக  வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட்மாதம் ஜாக்டோ - ஜியோ ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஊதியத்தை இழந்துள்ளனர். ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை கருணை அடிப்படையில் பணிக் காலமாக மாற்றி முறைப்படுத்திட வேண்டும்.கடந்த அரசு கடைப்பிடித்த ஆசிரியர் மற்றும் மாணவர்கள் விரோத போக்கை சமூக வலைதளங்களில் தனிச்சங்க நடவடிக்கையாக ஆக்கப்பூர்வமான கருத்துக்களை சுட்டிக்காட்டியமைக்காக நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு 17 ( B) குற்ற குறிப்பாணைகள் வழங்கப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளில் நிலுவையில் உள்ளது.  ஆசிரியர்களின் மனக்குமுறலை நீக்கும் பொருட்டு கருணை அடிப்படையில் இவற்றையும் ரத்து செய்து இந்த நாட்களை பணிக் காலமாக மாற்றி முறைப்படுத்திட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.