tamilnadu

மிரட்டி பணம் வசூல்: போலி நிருபர் கைது

கும்பகோணம், ஏப்.21- கும்பகோணம் மேலக்காவேரி கேஎம்எஸ் நகரில் வசிப்பவர் அன்சாரி(41). சம்பவத்தன்று இவர் ஆதம் நகரில் உள்ள கூட்டுறவு பொது விநியோக அங்காடிக்கு சென்றார். பின்னர் தனது குடும்ப அட்டையை விற்பனையாளர் காமராஜரிடம்(42) காட்டி 10 கிலோ அரிசி தரும்படி கேட்டார். அந்த கார்டை, விற்பனையாளர் பிஓஎஸ் மிஷினில் ஸ்வைப் செய்து பார்த்த போது ஏற்கனவே அரிசி வாங்கி விட்டதாக பதிவாகியிருந்தது.அப்போது அன்சாரி, தான் பத்திரிகை நிருபர் என்றும், கண்டிப்பாக அரிசி தர வேண்டுமென்றும் கேட்டுள்ளார். இதில் காமராஜ் அரிசி தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அன்சாரி, காமராஜை தாக்கி தகாத வார்த்தை பேசி மிரட்டினார். இதன்பின் காமராஜ், கிழக்கு காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்தார். இதன் பேரில் வழக்கு பதிந்து அன்சாரியை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் இவர், கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தான் பத்திரிகை மற்றும் டிவி நிருபர் என ஏமாற்றி போலி அடையாள அட்டையை காண்பித்து மிரட்டி பலரிடம் பண வசூலில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. இவருடன் சேர்ந்து போலியாக பத்திரிகையாளர் என்ற பெயரில் பணம் வசூலித்த மற்றொருவரை தேடி வருகின்றனர்.