tamilnadu

img

பாசன வாய்க்காலில் விடப்பட்ட  வீட்டு கழிவுநீர் குழாய்கள் அகற்றம்

 தஞ்சாவூர், ஜூன் 15- டெல்டா பாசனத்திற்காக மேட்டூரில் இருந்து ஜூன் 12-ல் திறந்து விடப்பட்ட தண்ணீர் திங்கள்கிழமை கல்லணை வந்து சேர்ந்தது. கல்லணையில் இருந்து, செவ்வாய்க்கிழமை தண்ணீர் திறந்து விடப்படுகிறது.  இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஆனந்தவள்ளி வாய்க்கால் தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதனை கண்காணித்து வருகின்றனர். பேராவூரணி ரயில்வே ஸ்டேஷன் முதல் நாட்டாணிக்கோட்டை வரை, ஆனந்தவள்ளி வாய்க்காலில், குப்பை, கூளங்கள் நிறைந்து, சாக்கடை நீர் சூழ்ந்து கிடந்தது. சிலர், தங்கள் வீடுகளின் கழிவுநீரை, குழாய் அமைத்து, பாசன வாய்க்காலில் விட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கழிவுநீர் குழாயை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றி, அப்பகுதியைச் சேர்ந்த 6 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.  இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து ஏராளமானோர் கழிவுநீரை பாசன வாய்க்காலில் விடுவது வழக்கமாக உள்ளது. எனவே, வெறும் கண் துடைப்பாக இல்லாமல், கழிவுநீர் குழாய்களை அகற்றி, ஆனந்தவள்ளி வாய்க்காலை பாதுகாக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.