தஞ்சாவூர்:
தஞ்சாவூர், கீழ அலங்கம் பகுதியில், பொலிவுறு நகரம் திட்டத்தில் நடைபெற்று வரும் அகழி தூர்வாரும் பணியின் போது, அப்பகுதியில் அரண்மனையிலிருந்து அகழிக்கு நீர் வரக்கூடிய வரத்துக்கால் வடிவமைப்பை (நீர்த்தூம்பி) வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான முனைவர் மணி. மாறன், சுவடியியல் ஆய்வாளர் கோ.ஜெயலெட்சுமி ஆகியோர் இதனை கண்டறிந்தனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:“தஞ்சை பல நூற்றாண்டு வரலாறு கொண்டது. பல்லவர், முத்தரையர், சோழர், பாண்டியர், நாயக்கர், மராத்தியர் போன்ற மரபு மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டு, பின் ஆங்கிலேய ஆட்சியின் ஆளுகையின் கீழிருந்து, பின்பு தமிழக மாவட்டங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. தஞ்சை நகரம் கீழவீதி, மேலவீதி, வடக்குவீதி, தெற்குவீதி என்று நான்கு வீதிகளும் அதன் புறம்படியாக கீழ அலங்கம், மேல அலங்கம், தெற்கு அலங்கம், வடக்கு அலங்கம் என்று இருக்கக்கூடிய பகுதியை ஒட்டியவாறு நான்கு புறமும் நீர் அரணாக மிகப்பெரும் அகழி மன்னர்கள் காலத்தில் வெட்டப்பெற்று நீரால் சூழப்பட்டு நகருக்குள் அமைந்துள்ள அரண்மனையின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தது. பல நூற்றாண்டுகள் உயிர்ப்புடன் திகழ்ந்த அகழி காலப்போக்கில் ஆங்காங்கே தூர்க்கப் பெற்று பல கட்டிடங்கள் அங்கே எழுந்தன. இருப்பினும் மேல அலங்கம், வடக்கு அலங்கம், கீழ அலங்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்றளவும் அகழியானது ஓரளவிற்கு இருந்து வருகிறது. இந்த அகழியின் உட்புறச்சுவர்கள், ஒரு சில இடங்களில் பழைய கட்டுமானத்துடன் காணப்படுகிறது.
அன்றைய நிலையில் அகழி, அகழியை ஒட்டிய கோட்டை காவல் கோபுரங்களுடன் திகழ்ந்தன. இன்று தஞ்சை பெரிய கோயிலைச் சுற்றி அமைந்துள்ள அகழியின் கோட்டை மேல் காணப்படும் காவல் கோபுரங்கள் மட்டுமே நல்ல நிலையில் காணப்படுகின்றன. மேல அலங்கம், கீழ அலங்கம், வடக்கு அலங்கம் பகுதிகளில் கோட்டை மீது குடியிருப்பு பகுதிகளாக மாறிய நிலையில், தமிழ்நாடு அரசின் முயற்சியால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, பொலிவுறு நகரம் திட்டத்தில் அகழி தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தஞ்சை கொடிமரத்து மூலையை ஒட்டிய பகுதியில் (கீழ அலங்கம்) அகழியின் கரை சுவற்றிற்கு இடையே நீர்வழிப்பாதை (நீர்த்தூம்பி) அமைந்துள்ளது கண்டறியப்பட்டது. கரைச்சுவர் செம்புறாங்கற்கள் கொண்டு வலிமையாகக் கட்டப்பட்டுள்ளன.
இவற்றிற்கிடையே ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையின் பன்னிரண்டாம் காதையான அறவணர் தொழுத காதை என்னும் பகுதியில் புத்ததேவன் தோற்றம் பற்றிக் கூற வரும் கூலவாணிகன் சாத்தனார், பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி, இரும்பெரு நீத்தம் புகுவது போல, அளவாச் சிறுசெவி அளப்பரு நல்லறம் உளமலி உவகையோடு உயிர்கொளப் புகூஉம். (79-82) என்கிறார். சுருங்கை என்பது பூமிக்கடியில் செல்லும் சிறிய குழாய். அதாவது பெருங்குளங்களாகிய பேரேரிகளின் ஒருபுறம் உள்ள சிறிய சுருங்கை வழியாக, அங்கு தேக்கப்பட்ட நீர் வெளியேறி மக்களுக்கு அளவிட இயலாத வகையில் பயன்தரும். அதுபோல, செவித்துளை வழியே நல்ல அறக்கருத்துக்கள் உள்ளத்தைச் சென்றடையும் என்பதே இதன் பொருளாகும்.
அவ்வாறு சுட்டுவது போல சுருங்கைச் சிறு வழியாக அமைந்த நீர்த்தூம்பியினைக் காண முடிந்தது. அரண்மனை உள்புறங்களில் பெய்யக் கூடிய மழை நீரும், அரண்மனையின் உள் அமைந்திருந்த குளங்கள், கிணறுகள் இவற்றில் இருந்து வெளியேறக் கூடிய மிகை நீரும் அகழியில் சென்று சேருவதற்கான நிலத்தடியில் அமைந்திருந்த வழித்தடமே இந்நீர்வழித் தூம்பாகும். நான்கு புறமும் செம்புறாங் கற்கள் கொண்டு சதுர வடிவில் முக்காலடி அளவில் இந்த நீர்வழிப்பாதை கட்டப் பெற்றுள்ளது. பழந்தமிழகத்தில் நீர் மேலாண்மையில் தமிழர்கள் சிறந்து விளங்கியமைக்கு இதுபோன்ற கட்டுமானங்களே நல்லதொரு எடுத்துக்காட்டாகும்”. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.