தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள தனியார் உதவிபெறும் பள்ளியில் படித்த மாணவிகளில் மேலும் 36 மாணவிகள், ஒரு ஆசிரியைக்கு கொரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானதை அடுத்து மாவட்ட ஆட்சியர்பள்ளியை பார்வையிட்டு, கொரோனா பரவியது தொடர்பாக உரிய ஆய்வறிக்கையை தயாரித்து வழங்க கண்காணிப்பு குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
அம்மாப்பேட்டையில் தனியார் உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 1,200 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பிளஸ்2 மாணவி ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து கடந்த 11-ஆம்தேதி அந்த மாணவி படிக்கும் வகுப்புகளில் உள்ள 460 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.இதன் முடிவுகள் சனிக்கிழமை வெளியானதில் 20 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து மாணவிகள் அனைவரும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் கடந்த 12 ஆம் தேதி மீதமுள்ள பள்ளி மாணவிகள், ஆசிரியைகள் ஆகியோருக்கு பரிசோதனை செய்த முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியானது. இதில் 36 மாணவிகளுக்கும், ஒரு ஆசிரியைக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.இதையடுத்து அவர்களும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒரே பள்ளியில் மொத்தம் 56 மாணவிகளுக்கும், ஒரு ஆசிரியைக்கும் தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து அப்பள்ளிக்கு இரு வார காலம் விடுமுறை அளிக்கப்பட்டு, பள்ளி வகுப்பறைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கு சென்று அங்குள்ள ஆசிரியைகள், சுகாதாரப்பணி யாளர்களிடம் கொரோனா தொற்று தொடர்பாக விவரம் கேட்டறிந்த பின், “கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மாணவிகள் 24 கிராமங்களிலிருந்து வருவதால் அந்தந்த கிராமங்களில் சிறப்பு பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகிறது. அதேபோல் பள்ளி உள்ள பகுதியிலும் சிறப்பு பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது. இதில்மாணவிகளின் பெற்றோர்கள், தொடர்புடையவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.தஞ்சாவூர் மாவட்டத்தில் 439 பள்ளிகளில் உடனடியாக சுகாதாரப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை, முகக்கவசம் அணிதல் போன்ற விழிப்புணர்வு நடவடிக்கைக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. இதுவரை தஞ்சாவூர் மாவட்டத்தில் 5000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த பள்ளியில் திடீரென எப்படி இவ்வளவு பேருக்கு கொரோனா வந்தது என்பது குறித்து வட்டாட்சியர் தலைமையில் வட்டார கல்வி அலுவலர், வட்டார மருத்துவ அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஆராய்ந்து உடனடியாக ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதே போல் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களிலும் வட்டாட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு பள்ளிகளை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
மாணவிகளின் பெற்றோருக்கும் கொரோனா
இதனிடையே, பள்ளிக்கு வரும் மாணவிகளின் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 24 கிராமங்களில் கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பரிசோதனை முடிவுகள் ஓரிரு தினங்களில் வெளியாக இருக்கும் நிலையில், மாணவிகளின் பெற்றோர் நான்கு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து நான்கு பேரும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.