தஞ்சாவூர்:
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையை அடுத்த பகட்டுவான்பட்டி கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுவன். இவரது தந்தை ரேசன் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த சில ஆண்டாக தஞ்சையில் வசித்து வருகின்றனர். 13 வயது சிறுவனுக்குத் தசை மற்றும் இணைப்புத் திசு சிதைவு நோய் இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த ஜூன் 24 ஆம் தேதி சிறுவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், தஞ்சாவூர் வ.உ.சி. நகரிலுள்ள, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.பின்னர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை அதிகாலை சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இரவு 11.15 மணிக்கு உயிரிழந்தார். இதையடுத்து, சிறுவனின் உடல் பெற்றோர்கள் முன்னிலையில், சுகாதாரத் துறை ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, சொந்த ஊரில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மேலும், சிறுவனுக்கு கொரோனா தொற்று எப்படி ஏற்பட்டது என விசாரணை நடந்து வருகிறது. பெற்றோர் உள்ளிட்டோர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டும் வருகிறது.
இது குறித்து மருத்துவகல்லுாரி மருத்துவமனை மருத்துவர்கள் கூறியதாவது: சிறுவனுக்கு தசைச் மற்றும் இணைப்பு திசுச் சிதைவு நோய் பிறவியிலிருந்தே இருந்து வந்தது. மூச்சுத்திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அவருக்கு இதய இயங்கு விசை 70 சதவீதம் இருக்க வேண்டிய நிலையில், 27 சதவீதம் மட்டுமே இருந்தது. இருப்பினும், இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தாலும், அவரது இறப்புக்குத் தசை மற்றும் இணைப்புத் திசு சிதைவு நோயே காரணம்” என்றனர்.