கும்பகோணம், மே 7- ஊரடங்கு காரணமாக மாற்றுத்திறனாளிகள் இடம்பெற்றுள்ள குடும்பங்கள் விவரிக்க முடியாத துயரங்களுக்கு ஆளாகி உள்ளனர். பசி பட்டினியாலும் மருந்து, மாத்திரைகள் வாங்க முடியாமல் பிரத்யேக அவசர செலவுக்கு காசு இல்லாமல் பல லட்சக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் அல்லல்படுகின்றனர். இது குறித்து முதலமைச்சர், அதிகாரிகளுக்கு பலமுறை சங்கத்தின் சார்பில் முறையிட்டும் எவ்வித பயனும் இல்லாததால் அரசு அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் சுகுமாரன், சேகர் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் சரவணன், சுபாஷ், தர்மாம்பாள் உள்ளிட்டோர் சிறப்பு நிவாரணமாக ரூ 5 ஆயிரம் நிதி வழங்க வலியுறுத்தி குடியேறும் போராட்டம் நடத்தினர்.