ஒவ்வொரு ஆண்டும் ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் மேட்ரிட் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.
நேற்று நடைபெற்ற மேட்ரிட் ஓபன் காலிறுதிப் போட்டி ஒன்றில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் சுவிட்சர்லாந்து நாட்டு வீரர் ஸ்டேன் வாவரிங்காவை 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்தார். இதன்மூலம் நடால் 70வது முறையாக அரையிறுதியில் நுழைந்துள்ளார். இவர் இதுவரை 17முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.
அதேபோல், மற்றொரு காலிறுதி போட்டியில் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் ஆஸ்திரியா நாட்டு வீரரான டோமினிக் தியமிடம் 6-3, 6-7 மற்றும் 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து மேட்ரிட் தொடரிலிருந்து வெளியேறினார்.
ஏற்கனவே தற்போது நடைபெற்றுவரும் மேட்ரிட் ஓபன் தொடரை தனது இறுதி தொடர் என அறிவித்திருந்த ஸ்பெயின் வீரர் டேவிட் பெரர் காலிறுதியில் ஜெர்மன் நாட்டு வீரர் அலெக்ஸாண்டர் ஜிவ்ரெவ்விடம் 4-6 மற்றும் 1-6 என்ற செட் கணக்கில் தோல்வியுற்றார். இதன்மூலம் டேவிட் பெரரின் டென்னிஸ் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இவர் கடந்த 2008, 2009 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளின் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் பட்டங்களை வென்றவர்.