சென்னை, செப்.29- தமிழக காவல் துறைக்கு உபகரணங்கள் வாங்க விடப்பட்ட டெண்டரில் ரூ. 350 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையை தொடங்கியுள்ளது. தமிழக காவல்துறைக்கு ரேடியோ, சி.சி.டி.வி. உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்க கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை தமிழக காவல்துறை தொழில்நுட்ப சேவைப் பிரிவு மேற்கொண்டுள்ளது. உபகரணங்களை வாங்க பல்வேறு நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், டெண்டர் நடைமுறையில் ஊழல் நடந்திருப்பதாக தமிழக அரசுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவின் பேரில் தமிழக டி.ஜி.பி. திரிபாதி கடந்த 19ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டார்.
350 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தமிழக காவல்துறையின் தொழில்நுட்ப பிரிவு கண்காணிப்பாளரான அன்புச்செழியன் மீது இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. டெண்டர் விதிகளை நிர்ணயிப்பது மற்றும் டெண்டர் விடும் நிறுவனங்களைத் தேர்வு செய்வதில் அன்புச்செழியன் முக்கிய பங்காற்றி வருகிறார். இந்நிலையில் வி லிங்க் சிஸ்டம் என்ற நிறுவனத்துக்கு அதிக அளவில் டெண்டர்கள் விடப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 16 மாவட்ட காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்க விடப்பட்ட டெண்டரில் 10 மாவட்டங்களுக்கு வி லிங்க் சிஸ்டம் நிறுவனத்துக்கு மட்டுமே டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. தகுதியுள்ள பல நிறுவனங்கள் டெண்டர் கோரிய நிலையில் காவல் துறை உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக கண்காணிப்பாளர் அன்புச்செழியன் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கும் டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.