tamilnadu

img

இவர்கள் யாருக்காக? ஆன்லைன் வகுப்பு தொடர்பான சிக்கல்

“ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப் படும். பொது முடக்க காலத்தில் கல்விக் கட்டணத்தை வசூலிக்கும் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்”இப்படி கூறிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அடுத்த சில நிமிடங்களில்” ஆன் லைனில் வகுப்பு எடுப்பதை தடுக்க முடியாது” என்று தனது நிலையை மாற்றிக் கொண்டார்.நாடு முழுவதும் ஊரடங்கின் நான்காம் கட்டம் முடிவடைந்து 5.0 என்று அடுத்த கட்டத்திற்கு ஜூன் 30 வரை பொது முடக்கம் சென்று விட்டது. வேலை இழப்பு, உயிர் பலி, பொருளாதார ஏற்றத் தாழ்வு ஆகியவை குடும்பத்திற்கு குடும்பம் ஏதோ ஒரு வகையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் சென்னை,செங்கல்பட்டு காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது.ஊரடங்கு உத்தரவால் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் குழந்தைகள் உளவியல் ரீதியாக பெரும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதால் பாடத் திட்டத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பலமாக எழுந்தன. இதற்காக அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவும் அறிக்கையை சமர்ப்பிக்க முடியவில்லை. மேலும் ஒரு வார காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இத்தகைய சிக்கலில் தவித்து வரும் பெற்றோரின் கவனம் முழுவதும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? குழந்தைகளை எப்படி பள்ளிக்கு அனுப்புவது? என ‘விழி பிதுங்கி’ நிற்கிறார்கள். ஆனால், ஆன் லைன் வகுப்புகளை துவக்கி விட்டன தனியார் கல்வி நிறுவனங்கள்.

அசாதாரணமான இந்த கால கட்டத்தில், பெரு மாநகரமான சென்னை உள்பட பல பகுதிகளில் இணையதள இணைப்புகள் சரிவர கிடைப்பதில்லை. தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் நாளொன்றுக்கு வழங்கும் திறன் (ஜிபி) சேவையை பொது மக்களும் பயன்படுத்துவதில் பெரும் சிக்கல் உள்ளது.மறுபுறத்தில் சமூக உளவியல் தனி மனித உளவியலை பாதிக்கிறது. இவ்வளவு சிக்கலுக்கு இடையிலும் உயிரைக் காக்கும் பெரும் போராட்டத்தில் பாடத்தைப் படிப்பது என்பது குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்கவே முடியாது. இதை மருத்துவ உலகமும் அறிவுறுத்தி வருகிறது.கல்விச் சாலையை ‘வியாபார கூடமாக’ மாறிவிட்ட தனியார் பள்ளிகள், குழந்தைகள் ஆரோக்கியம், கல்வியில் சித்தாந்தம் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படுவதில்லை. வியாபாரமே பிரதான நோக்கமாக செயல்படுகின்றன.

இந்த பின்னணியில், சென்னை உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் முன்னணி தனியார் கல்வி நிறுவனங்கள் தினசரி ஆன் லைன் மூலம் வகுப்புகள் நடத்தி குறைந்தது 6 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரைக்கும் கட்டணத்தை வசூ
லித்துவிட்டன.இத்தகைய சிக்கலில் தவித்து வரும் பெரும்பாலான பெற்றோரின் கவனம் முழுவதும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? குழந்தைகளை எப்படி பள்ளிக்கு அனுப்புவது? என ‘விழி பிதுங்கி’ நிற்கிறார்கள்.நடப்பு கல்வியாண்டை துவங்குவது எப்போது? என பள்ளிக்கல்வித் துறையும் அமைச்சரும் வழி தெரியாமல் நிற்கும்’ன நிலையில், தூண்டில் போடும் மீன்வனுக்கு ‘தக்க’ மீது பார்வை என்பதை போன்று இந்தப் பேரிடர் காலத்திலும் ‘கட்டணமே கொள்ளை’ என்று  குறுஞ் செய்திகள் மூலம் கட்டணத்தை வசூலித்து வருகின்றன. ஆன்லைன் மூலம் கட்டாதவர்கள் பள்ளிகள் வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வரிசையில் ‘தவமாய் தவம்’ கிடைக்கின்றனர்.

தனியார் பள்ளிகளின் இந்த அடாவடித் தனத்தை அரசு அதிகாரிகளுக்கும், ஊடகங்களுக்கும் தகவல் கொடுத்தால் குழந்தைகளின் எதிர்காலம் பாதித்துவிடும் என்று அஞ்சும் பெற்றோர் கள் பலரும் புகார் கொடுக்க தயக்கம் காட்டி வருகிறார்கள்.இந்த பிரச்சனைகள் குறித்து பொதுப் பள்ளிக் கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் கேட்டபோது, “கடந்த காலங்களில் சுனாமி, வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடரால் பெரும் பகுதி பாதித்த போதும் பல மாதங்கள் பள்ளிகள் இயங்க முடியவில்லை. அத்தகைய வேலை இழப்பை எதிர் கொண்டு பாடங்களை நடத்தி முடித்து தேர்வுகளை நடத்தி அனுபவம் தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித் துறைக்கு உண்டு” என்றார்.

ஊரடங்கு என்பது விடுமுறை காலம் அல்ல. சுகாதார பேரிடர் காலம். நோய் தோற்று குறித்த அச்சமும், பதட்டமும் நிறைந்திருக்கும் சமூக சூழல். இத்தகைய சூழலில் மாணவர்களை கட்டாயப் படுத்தி இணையதள வகுப்புகள் நடத்துவது நியாயமற்ற அணுகுமுறை. பாகுபாடு கொண்டது என்றும் கடுமையாக சாடினார்.ஆன் லைன் வகுப்புகள் தொழில் நுட்பத்தை பயன்படுத்த வாய்ப்பு உள்ளவர்களின் நலன் சார்ந்து எடுக்கப்படும் நிர்வாக முடிவே ஆகும்.இது சமூக நலன் சார்ந்தோ, குழந்தைகள் நலன் சார்ந்தோ, கல்வியில் செயல்பாட்டை சார்ந்தோ எடுக்கப்படும் முடிவு அல்ல. இது பல்வேறு பரிணாமத்தை உள்ளடக்கியதாகும்.

தொழில் நுட்பத்தின் வளர்ச்சி இணையதள வகுப்பு என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால், வகுப்பறை கற்றல் செயல்பாட்டில் கிடைக்கும் அனுபவம், மாணவர்களின் குழு செயல்பாடு, கேள்வி எழுப்புதல், விவாதம் செய்தல் என இவை 
எதுவும் ஆன் லைன் வகுப்பில் கிடைக்காது என்றும் பிரின்ஸ் தெரிவித்தார்.இந்த அசாதாரண சூழ்நிலையில் குழந்தைகள் பாடங்களோடு எவ்வித தொடர்பும் இல்லாமல் இருக்கிறார்கள். பள்ளிகளைத் திறந்ததும் அவர்களுக்கு பாடங்கள் மீதான அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இணையவழி (ஆன்லைன் வகுப்பு) பயன்பாட்டை தவறாக பயன்படுத்தினாலும் அதை கவனிக்க முடியாத சூழல் ஏற்படும். அதற்கான வாய்ப்புகளை நாமே மாணவர்களுக்கு உருவாக்கி கூடாது என கல்வியாளர்கள் பலரும் அரசுக்கு கோரிக்கை விடுகின்றனர்.

ஆனால், அரசின் முடிவை ஒரு சில மணித்துளிகளில் மாற்றும் சக்தி தனியார் பள்ளிகளுக்கு உண்டென்றால் ஆண்டாண்டு காலமாக நடக்கும் கட்டணக் கொள்ளைகளும் அரசுக்கு தெரிந்தே நடக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என் பதை இந்த சம்பவம் நிரூபித்துக் காட்டுகிறது.

===சி.ஸ்ரீராமுலு===