tamilnadu

img

தஞ்சை மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

தஞ்சாவூர், அக்.10-  தஞ்சை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் 7 பேரை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றனர். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த, மல்லிப்பட்டினம் ராமர்கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கு சொந்தமான எம்.பி.எம்.06 என்ற பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த ரெத்தினமணி (25), முருகன் (40), சரவணன் (25) ஆகி யோரும், கள்ளிவயல்தோட்டம் மக்கான் முகமது மைதீன் என்பவருக்கு சொந்தமான டி.என.07-1462 என்ற பைபர் படகில் நாகப்பட்டினம் கீச்சான்குப்பத்தை சேர்ந்த உதயா (28), இலக்கியன் (30), சின்னமேடு கனகராஜ் (34), கலைதாசன்(30) ஆகிய நான்கு பேரும் புதன்கிழமை காலை மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். 

20 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்ததாக கூறி 7 மீனவர்களையும் கைது செய்து இலங்கை கொண்டு சென்றனர்.  இதனால் மல்லிப்பட்டினம் பகுதியில் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்படுத்தி யுள்ளது. எனவே உடனடியாக மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச்செய லாளர் ஏ.தாஜுதீன் வலியுறுத்தி உள்ளார்.