போலீசார் மிருகத்தனமாக தாக்கியதில் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் மொபைல் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளனர். அறிவிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, ஜெயராஜை, போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதை கேள்விப்பட்டு அவருடைய மகன் பென்னிக்ஸ் அங்கு சென்றபோது, தந்தை, மகன் இருவரையும் போலீசார் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரையும் கோவில்பட்டி சிறையில் போலீசார் அடைத்துள்ளனர். பிறகு, பென்னிக்ஸும், ஜெயராஜும் அடுத்தடுத்து 12 மணி நேர இடைவெளியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர், இருவரும் இறந்துவிட்டதாக அவர்களது குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.