tamilnadu

img

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கிடுக!

புதுதில்லி, ஆக.12- நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகள் வழங்கிட மத்திய அரசு முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் காரணமாக, பலர் உயிரிழந்துள்ளனர். உடைமைகளுக்கும், கால்நடைகளுக்கும் கடும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த துயரம் குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது. இதில் கேரளம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 2018இல் வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவிற்குப்பின் சரியாக ஓராண்டு காலத்தில் மீண்டும் இந்தத் துயர் ஏற்பட்டுள்ளது.  இதுவரை, 72 பேர் இறந்துள்ளார்கள். மீட்பு நடவடிக்கையின்போது மேலும் பலரது சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. 

கிட்டத்தட்ட மூன்று லட்சம் மக்கள் தங்கள் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு, மாநிலம் முழுதும் உள்ள 1639 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் உள்ள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம், இந்தப் பேரழிவிலிருந்து மக்களை மீட்டிட மீண்டும் ஒருமுறை தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 40 பேரும் கர்நாடகாவில் 32 பேரும்,  குஜராத்தில் 24 பேரும் உயிரிழந்துள்ளார்கள். ஆந்திரா-தெலுங்கானாவில் ஓடும் பெரிய ஆறுகளான துங்கபத்திரா, கிருஷ்ணா ஆகியவற்றிலும் அவற்றின் கிளை ஆறுகளிலும் வெள்ளம் அபாய எல்லைக்கும் மேலாக ஓடி அளப்பரிய அழிவையும் சேதத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய மத்திய உள்துறை அமைச்சரோ பாஜக ஆளும் மாநிலங்களான மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் மட்டும் வான் வழியே வெள்ளம் பாதிக்கப் பட்ட பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டி ருக்கிறார். மிகவும் மோசமாகப் பாதிப்புக்கு உள்ளாகி யுள்ள கேரள மாநிலத்தை ஆய்வு செய்வதை வேண்டுமென்றே தவிர்த்திருக்கிறார் என்றே தெரிகிறது.  ஆர்எஸ்எஸ்/பாஜகவுடன் தங்களை இணைத்துக்கொண்டுள்ள சில நபர்கள் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு உதவிட வேண்டாம் என்று சமூக வலைத்தளங் களில் இப்போதும் பிரச்சாரங்களை மேற்கொண்டிருக்கின்றனர். இயற்கைப் பேரிடர் மற்றும் எதிர்பாராத மரணங்கள் ஏற்படும்  சமயங்களில், அரசியல் காழ்ப்புணர்ச்சியை மனிதாபிமானமுள்ள எவரும் செய்திட மாட்டார்கள். ஆனால் இந்த இழிபிறவிகள் இவ்வாறு செய்து கொண்டிருக்கின்றன. இந்த இயற்கைப் பேரிடரை எதிர்கொண்டு சமாளித்திடுவதற்கு வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள அரசாங்கங்கள் அனைத்திற்கும் தேவையான உதவியை வழங்கிட வேண்டும் என்று மத்திய அரசாங்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கேட்டுக் கொள்கிறது. (ந.நி.)