புதுதில்லி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நாடு முழுவதும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோவிட் பெருந்தொற்று அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் மரணங்களைத் தடுத்து நிறுத்தவும், மருத்துவ வசதிகளில் உள்ள பற்றாக்குறைகளை சமாளிக்கவும் உடனடியான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. கோவிட் விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை என மக்கள் மீது பழிபோட்டும், மாநில அரசாங்கங்கள் மீது பழியைத் திசைத்திருப்பியும் தன்னுடைய பொறுப்பில்இருந்து மத்திய அரசாங்கம் தப்பிக்கமுடியாது. மத்திய அரசாங்கம் அனைத்துவிதமான பெருந்திரள் கூட்டங்களுக்கும் உடனடியாகத் தடைவிதிக்க வேண்டும்; தேர்தல் கூட்டங்களில் விதிமுறைகள் கடைபிடிக்கப் படுவதை கடுமையாக முறைப்படுத்த வேண்டும்; இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் கட்டணமின்றி வீடு போய்ச்சேர சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்; பி.எம்.கேர்ஸ் நிதியம் மூலமும், கொரோனாவுக்காகத் திரட்டிய பிற நிதியையும் மருத்துவவசதிகளை மேம்படுத்த உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்; அவசரகால அடிப்படையில் நாடுமுழு வதும் தடுப்பூசி நடவடிக்கையை முடுக்கிவிட வேண்டும்.இந்தச் சூழல், மக்களின் வாழ்வாதார நிலையைக் கடுமையாகப் பாதித்து, மேன்மேலும் அதிகமான துயரங்களை மக்கள் மேல் சுமத்துகிறது. அரசாங்கம், நிவாரணம் தேவைப்படும் அனைவருக்கும் மாதம் 7500 ரூபாயையும், இலவச உணவு தானியங்களையும் நிவாரணமாக வழங்க வேண்டும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தை பெருமளவில் விரிவு படுத்த வேண்டும். கூடியவிரைவில் நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் உடனடியாகத் தொடங்கிட வேண்டும்.
இந்த நடவடிக்கைகள் எல்லாம், உடனடியாகச் செயல்படுத்த வேண்டிய குறைந்தபட்ச நடவடிக்கைகளே.போர்க்கால அடிப்படையில், குறைந்தபட்சமாக இந்த நடவடிக்கைகளையாவது பிரதம
ரும், மத்திய அரசாங்கமும் நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கேட்டுக்கொள்கிறது.