புதுதில்லி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுக் கூட்டம் இணையம் வழியில் புதன்கிழமையன்று நடைபெற்றது.கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு:
அதிகரித்துவரும் கோவிட்-19
நாடு முழுதும், கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மனித உயிர்கள் மிகப் பெரிய அளவில் பலியாகிக் கொண்டிருப்பது தொடர்கிறது. தவிர்க்கப்பட்டிருக்கக்கூடிய இந்த மரணங்கள் குறித்து அரசியல் தலைமைக்குழு ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திக் கொள்கிறது. உயிர்களை இழந்து துயருற்றிருப்பவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் தன் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறது.பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்டபோதிலும்கூட, மத்திய அரசாங்கம், மனிதஉயிர்களைப் பாதுகாத்திடத் தேவையானஅளவிற்கு மருத்துவ ஆக்சிஜன்களை உத்தரவாதப் படுத்துவதில் தோல்வியடைந்திருக்கிறது. எவ்விதத் தங்குதடையுமின்றி மருத்துவ ஆக்சிஜன் தேவைப்படும் அனைத்து மருத்துவமனைகளுக்கும், சுகாதார மையங்களுக்கும் பாதுகாப்பு இல்லங்களுக்கும் மருத்துவ ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்படுவதை உத்தரவாதம் செய்திடவேண்டும் என்கிற கோரிக்கையை அரசியல் தலைமைக்குழு மீண்டும் வலியுறுத்துகிறது.
அனைவருக்குமான தடுப்பூசித் திட்டத்தை விரைவுபடுத்துக!
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசிகளை சர்வதேச ரீதியாகவும், உள்நாட்டிலும் சாத்தியமான அனைத்துமுனைகளிலிருந்தும் உடனடியாகக் கொள்முதல் செய்திட வேண்டும். பொதுத்துறை தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் தடுப்பூசி உற்பத்திக்காகப் பயன்படுத்திக் கொள்ளப்பட வேண்டும். தடுப்பூசித் திட்டத்திற்காக பட்ஜெட் ஒதுக்கீட்டுத் தொகை 35 ஆயிரம் கோடி ரூபாயும் உடனடியாகப் பயன்படுத்தப்பட்டு, தடுப்பூசித் திட்டத்தை நாடு முழுதும் தீவிரமாக அமலபடுத்திட வேண்டும்.
வாழ்வாதாரப் பிரச்சனைகள்
நாட்டின் பல முனைகளிலும் கொரோனாவைரஸ் பெருந்தொற்று மற்றும் அதன்விளைவாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்குகள்-சமூக முடக்கம் போன்றவற்றால் இயல்புவாழ்க்கை சீர்குலைந்திருப்பதன் காரணமாக, பல லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வேலைகளை இழந்திருக்கிறார்கள். மத்திய அரசாங்கம் இந்தக் காலத்தில் வேலையிலிருப்பவர்களின் வேலைகளைப் பாதுகாத்திட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உரிய கட்டளைகள் பிறப்பித்திட வேண்டும். மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்திட ஆட்சி அதிகாரத்தை மத்திய அரசு பிரயோகித்திட வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு கோருகிறது.வருமான வரி செலுத்தாத குடும்பத்தினர் அனைவருக்கும் மாதந்தோறும் 7,500 ரூபாய் நேரடி ரொக்க மாற்று அளிக்கப்படுவது அவசியமாகும்.. இதனை உடனடியாகத் தொடங்கிட வேண்டும்.
உணவு தானியங்கள்
மத்திய அரசின் கிடங்குகளில் பல கோடிக்கணக்கான டன் தானியங்கள் எவருக்கும் அளிக்கப்படாமல் வீணாகிக் கொண்டிருக் கின்றன. அவற்றை தேவைப்படுவோருக்கு இலவசமாக விநியோகித்திட வேண்டும்.
சென்ட்ரல் விஷ்டா கட்டுவதை நிறுத்துக!
மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அளவில் துன்ப துயரங்கள் ஏற்பட்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவு செய்து சென்ட்ரல் விஷ்டா என்னும் புதிய நாடாளுமன்றக் கட்டிடமும், பிரதமர் இல்லமும் கட்டுவதை மத்திய அரசாங்கம் தொடர்வது மிகவும் அருவருப்பான செயலாகும். இது உடனடியாக நிறுத்தப்படவேண்டும். இதற்காகச் செலவு செய்ய ஒதுக்கியிருக்கும் பணத்தை, மக்களுக்கு ஆக்சிஜன், தடுப்பூசிகள் மற்றும் இதர சுகாதார வசதிகளை அளிப்பதற்கு மாற்ற வேண்டும்.
சட்டமன்றத் தேர்தல்கள்
நான்கு பெரிய மாநிலங்களான கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாமில்நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், பாஜகவிற்குப் பலத்த பின்னடைவாகும். அது, மக்கள் மத்தியில் மதவெறித் தீயை விசிறிவிட கடுமையான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அதற்காகக் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்த போதிலும், மத்திய அரசின் உளவு ஸ்தாபனங்களைத் துஷ்பிரயோகம் செய்தபோதிலும், தேர்தல் தில்லுமுல்லுகள் செய்தபோதிலும் மக்களின் ஆதரவினைப் பெற முடியாமல் பாஜக தோல்வி அடைந்துவிட்டது, அது மக்களால் தீர்மானகரமான முறையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.இந்த முடிவுகள் இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக விழுமியத்தை பாதுகாப்ப தற்காகவும், மக்களின் வாழ்நிலைமைகளை மேம்படுத்துவதற்காகவும் நடைபெற்றுவரும் இயக்கங்களையும், போராட்டங்களையும் மேலும் வலுப்படுத்திடும்.
கேரளம்
கேரளாவில், இடது ஜனநாயக முன்னணியின் மகத்தான வெற்றியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வாழ்த்துகிறது. இடது ஜனநாயக முன்னணியிடம் மீண்டும் நம்பிக்கை வைத்து அதனை அரசாங்கம்அமைப்பதற்காக மீண்டும் தேர்ந்தெடுத்திருப்ப தற்காக கேரள மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. கேரளாவில் ஆட்சியிலிருக்கும் கூட்டணியை மீண்டும் தேர்ந்தெடுத்திருப்பது, நாற்பது ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் நடந்திருக்கிறது. இடது ஜனநாயக முன்னணியின் வெற்றி கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அது பெற்ற வெற்றியைவிடச் சிறந்ததாகும்.
ஆட்சியில் உள்ள அரசாங்கத்தின் செயல்பாடுகளின் மீதும், அது பின்பற்றிய மாற்றுக் கொள்கைகளுக்காகவும், அந்த மாநிலம் எதிர்கொண்ட இயற்கைப் பேரிடர்களையும், கொரோனா வைரஸ்பெருந்தொற்றையும் கையாண்ட விதத்திற்காக வும், மற்றும் அதன் மக்கள் நலத் திட்டங்களுக்காகவும் அது கேரள சமூகத்தின் மதச்சார்பற்ற ஜனநாயக நல்லிணக்கக் குணாம்சத்தைப் பாதுகாத்தமைக்காகவும் கேரள மக்கள் அந்த கூட்டணிக்கு வாக்களித்திருக்கிறார்கள்.
அஸ்ஸாம்
அஸ்ஸாமில் மட்டும் பாஜக தன்னுடைய ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. வாக்கு சதவீதத்தின் அடிப்படையின் பார்ப்போமானால், பாஜக கூட்டணிக்கும், மகாஜோட் கூட்டணிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் மிகவும் குறைவு.
தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை வெறியாட்டங்கள்
மேற்கு வங்கத்தில், தேர்தல் முடிவுகள் வெளிவந்தபின்னர், நமது கட்சி ஊழியர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்டவிழ்த்துவிட்டுள்ள வன்முறை வெறியாட்டங்களை அரசியல் தலைமைக்குழு வன்மையாகக் கண்டனம் செய்கிறது. இத்தகைய தாக்குதல்கள் தொடர்வதுடன் ஏற்கனவே நமதுகட்சித் தோழர் காகோலி கேட்ரபால் மற்றும் மதச்சார்பற்ற முன்னணியைச் சேர்ந்த தோழர்ஹசானுஷ்ஷமான் ஆகியோரின் உயிர்களைப்பறித்திருக்கிறது. இத்தகைய அராஜக அரசியலுக்கும், வன்முறை வெறியாட்டங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரசை அரசியல் தலைமைக்குழுகேட்டுக்கொள்கிறது. இது தடுக்கப்படுவதோடு உரிய எதிர்வினை ஆற்றப்படும்.
திரிபுராவில் சமீபத்தில் நடைபெற்ற திரிபுராமாவட்ட கவுன்சில் தேர்தல்களில் பாஜக தோல்வியடைந்தபின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகவும், அதன் ஆதரவாளர்களுக்கு எதிராகவும் வன்முறைத் தாக்குதல்களை பாஜக கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது.
விவசாயிகள் போராட்டம்
கோவிட்-19 கொரோனா வைரஸ் பெருந் தொற்று மேலும் தீவிரமடைந்திருக்கக்கூடிய நிலையில், மத்திய அரசாங்கம், கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தின் கோரிக்கைகளை ஏற்பதற்கு இதுவே சரியான தருணமாகும்.மத்திய அரசாங்கம், போராடும் விவசாய சங்கங்களின் தலைவர்களை உடனடியாக அழைத்துப் பேசி, வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேற்கு வங்கம்
மேற்கு வங்கத்தில் பாஜக தன்னுடைய அபரிமிதமான பண பலத்தையும் பல்வேறுவிதமான தில்லுமுல்லுகளையும் மேற்கொண்டபோதிலும் கடும் பின்னடைவினைச் சந்தித்திருக்கிறது. மேற்கு வங்க மக்கள் மிகவும் தெளிவான முறையில் மதவெறி சித்தாந்தத்தை நிராகரித்திருக்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளின் செயல்பாடுகள் மிகவும் ஏமாற்றம் அளிக்கக்கூடியதாக இருக்கிறது. மக்கள் பாஜக-விற்கும் திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையே ஏற்பட்ட கூர்மையான வெறித்தனத்தைத் தோற்கடிக்க வலியுறுத்தப்பட்டபோது, அவர்கள் இடதுசாரிகள்-காங்கிரஸ் (சஞ்சுக்தா மோர்ச்சா) கூட்டணியையும் புறந்தள்ளிவிட்டார்கள். இது தொடர்பாக உரிய படிப்பினைகளைப் பெறுவதற்காக, ஆழமான ஆய்வு கட்சியால் மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாடு
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி ஓர் அபாரமான வெற்றியை ஈட்டியிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் அஇஅதிமுக-பாஜக கூட்டணியை நிராகரித்திருக்கிறார்கள். ஆட்சியிலிருந்த அஇஅதிமுக அரசாங்கத்தையும் தோற்கடித்திருக்கிறார்கள். (ந.நி.)