புதுதில்லி:
8 ஆயிரம் பேர் முன்னிலையில், நரேந்திர மோடி வியாழனன்று இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவரின் பதவியேற்பு விழாவுக்கு, இந்தியாவிலுள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டதோ, இல்லையோ, பெருமுதலாளிகள், சினிமா பிரபலங்கள், சாமியார்கள் ஒருவர் தவறாமல் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களும் கூட்டம் கூட்டமாக கலந்து கொண்டனர்.
இந்நிலையில், மோடி பதவியேற்பு விழாவிற்கு, தனக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு இருந்ததாகவும், ஆனால், தன்னால் கலந்துகொள்ள முடியாமல் போய் விட்டதாகவும் பிரபல நடிகை காஜல் அகர்வால் கவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
“அன்புள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு... குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த உங்களின் பதவியேற்பு விழாவுக்கு என்னைக் கனிவுடன் அழைத்தமைக்கு மிக்க நன்றி. உங்களின் அழைப்பை ஏற்றதில் மிகவும் பெருமையும் கவுரவத்தையும் பெற்று, உங்களின் அன்பையும் பெற்றுள்ளேன். ஆனால், எனக்கான அழைப்பிதழ் தாமதமாகக் கிடைத்ததால், தில்லிக்கு குறித்த நேரத்தில் என்னால் வந்துசேர முடியவில்லை. அதை நினைத்து மிகவும் துயரப்படுகிறேன். அனைத்து வளங்களும் சக்தியும் கிடைத்து, உங்களின் ஆட்சி சிறக்கட்டும்” என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.