tamilnadu

img

கேரளத்தில் கொரோனா குறைகிறது அண்டை மாநிலங்களிலும் குறைந்தாலே நிம்மதி

சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா பேச்சு

திருவனந்தபுரம், ஏப்.13- கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளபோதிலும் அச்சம் விலகவில்லை. எனவே, கடைப்பிடித்து வரும் முன்னெச்சரிக்கையை தொடர வேண்டும். அண்டை மாநிலங்களிலும் குறைந்தாலே நிம்மதியாக இருக்க முடிவும் என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்தார்.

திருவனந்தபுரத்தில் திங்களன்று செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: விஷு (சித்திரை முதல்நாள்) போன்ற கொண்டாட்டங்களின்போது முன்எச்சரிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுவிடக்கூடாது. கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கொரோனாவை எதிர்கொள்ள நாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் பலனளிக்கத் தொடங்கியுள்ளன. ஆனால் முழுமையாக அச்சத்திலிருந்து விடுபட்டதாக கூறிவிட முடியாது. வைரசின் ஒரு கண்ணியை எங்கேனும் கவனிக்காமல் விட்டோம் என்றாலும் மீண்டும் நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பாகிவிடும்.

இனி பெரிய அளவில் நோய் அதிகரிக்காது என்று கருதப்படுகிறது. தனிமைப்படுத்தும் ஏற்பாடுகள் அதிநவீனமானவை. சாதாரண அறிகுறிகள் உள்ளவர்களிடம்கூட பரிசோதனை நடத்தப்படுகிறது. சாத்தியமான அளவுக்கு பரிசோதனைக் கருவிகள் (கிட்டுகள்) வழங்கப்படுகின்றன என்றாலும் அதனால் மட்டும் நமது தேவை பூர்த்தியாகாது. பாதிப்பு அதிகரித்தால் இவை போதாது. அதிக அளவிலான கிட்டுகள் பல இடங்களிலிருந்தும் வாங்குகிறோம். பத்து படுக்கைகள் தேவையான இடங்களில் ஆயிரம் படுக்கைகளை நாம் தயார் செய்து கொரோனாவுக்கு எதிராக போராடினோம். அனைத்து நோயாளிகளுக்கும் சிறப்பான சிகிச்சையளித்தது முக்கியமானது. மற்ற நோயாளிகளை இதர மருத்துவமனைகளுக்கு மாற்றி கொரோனா மருத்துவமனைகள் துவங்கியதும் துணை புரிந்தது. 

காசர்கோடு மருத்துவக் கல்லூரி கட்டிடத்தை கொரோனா மருத்துவமனையாக துரிதகதியில் மாற்ற முடிந்தது. கூடுதல் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களை அனுப்பினோம். காசர்கோட்டில் நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வருவது ஆறுதல் அளிக்கிறது. அதே நேரத்தில் கேரளத்தில் மட்டும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவதால் பயனில்லை. மற்ற மாநிலங்களிலும் வைரஸ் தாக்கம் இல்லாத நிலை ஏற்பட்டால் மட்டுமே நிம்மதியாக இருக்க முடியும். மத்திய அரசின் முடிவைப்பொறுத்து ஊரடங்கு தளர்வு குறித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.