தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 இந்திய நாடாளுமன்றத்தால் அரசிடம் அல்லது அரசு உதவிபெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையுடன் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக்க உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும். இச்சட்டம் டிசம்பர் மாதம் 2004, ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு மே 11, 2005, மக்களவையிலும், மே 12, 2005ஆம் ஆண்டு மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. ஜூன் 15 2005 குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. ஜூன் 21, 2005, அரசுப் பதிவிதழில் வெளியிடப்பட்டு அக்டோபர் 12, 2005ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வந்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவின் பிறப் பகுதிகள் அனைத்திற்கும் பொருந்தும். இதன்படி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும்/மகளும் தகவல் பெறும் உரிமை பெற்றவர்கள்.
நோக்கம்
அரசு அதிகாரிகள் தங்களது செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டிருப்பதும், ஊழலைக் கட்டுப்படுத்தி தவிர்ப்பதும், அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் துறைகள், மக்களுக்குத் தேவையானத் தகவல்களைத் தரக் கடமைப்பட்டுள்ளதை உறுதிசெய்வதும் தகவல் பெறும் சட்டத்தின் நோக்கங்களாகும்.
தகவல் கொடுக்கும் கடமை
அரசாங்கம் சார்ந்த அல்லது அரசு உதவிப் பெறும் நிறுவனங்கள், துறைகள், அலுவலகங்கள் அனைத்தும் தங்களைப் பற்றிய தகவல்களைத் தாமாகவே முன்வந்து மக்களுக்குக் கொடுக்க வேண்டும். குறிப்பாகத் தகவல்களைப் பெறும் நோக்கோடு மக்கள் தங்களிடம் கேட்கும்பொழுது தகவல்களை அளிக்கவேண்டியது அரசு, நிறுவன அலுவலர்களின் கடமை என இச்சட்டம் கூறுகின்றது.
தற்போதைய நிலை
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் எல்லைகளை விரிவாக்கி வெளிப்படை நிர்வாகத்தை அளிக்க வேண்டிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அதனை முடக்க நினைப்பது மக்களின் நம்பிக்கையை மழுங்கடிக்கும் செயல். தகவல் ஆணையத்தின் காலிப்பணியிடங்கள் நிரப்பாமல் விடுவது ஆணையத்தை செயல்படவிடாமல் தடுப்பதற்கு சமம். மத்திய அரசின் துறைகள் தொடர்பான தகவல்களை மின்னஞ்சல் மூலம் உடனடியாக பெரும் வசதி இருந்தும் அப்பணிகளை முடிக்க பணியாளர்கள் இல்லாமல் இருப்பது டிஜிட்டல் இந்தியாவின் சோதனைக்காலம்.
மத்தியில் இப்படி இருக்க மாநிலங்களில் நிலைமை மிக மோசம். தபால் மூலம் பெறப்படும் ஆர்.டி.ஐ மனுக்களே தேங்கி கிடக்கும்போது மின்னஞ்சல் முறை நடைமுறைக்கு வந்தால் அதோ கதிதான். ஓய்வு பெற்ற உயர்நிலை அலுவலர்களே தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் ஆணையர் பதிவியில் இருப்பதால் முழுமையான துரித பணி நடைமுறை இல்லை. இன்னும் சொல்லப்போனால் அரசு அலுவலகங்களில் இதற்க்கென தனி பணியாளர் நியமிப்பது இல்லை. முறையான பயிற்சியும் வழங்கப்படாததால் இப்பணியாளர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். பதில் வழங்க தாமதமானால் தண்டனைக்குள்ளாவோம் என்ற பயத்தில்தான் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். திட்டமிட்ட முறைப்படுத்திய நடைமுறைகள் மூலம் மக்களின் நியாயமான தகவல் கோரும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு பதில் வழங்க வேண்டும். இப்போதுள்ள நடைமுறையில் சில நபர்களே நூற்றுக்கணக்கான மனுக்களை போட்டு அலுவலக பணிகளை கெடுத்து அரசு அலுவலகங்களை கட்ட பஞ்சாயத்து கூடாரமாக மாற்றி வருகின்றனர். இந்நிலை மாற தகவல் உரிமை சட்ட நடைமுறைகளை சீர்படுத்த மாநில அரசுகளும் முன்வர வேண்டும்.