புதுதில்லி, ஜூலை 24- தகவல் அறியும் உரிமைத் (திருத்தச்) சட்டமுன்வடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் வலியுறுத்தினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. திங்கள் அன்று மாலை மக்களவையில் 2019ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைத் திருத்தச் சட்டமுன்வடி வின் மீது விவாதம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பி.ஆர். நடராஜன் பேசியதாவது: முதற்கண் இந்தச் சட்டமுன்வடிவை நான் எதிர்க்கிறேன். முதலாவதாக, நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை, அரசாங்கம் பறித்துக்கொள்ள அனுமதிக்கக் கூடாது. இரண் டாவதாக, தகவல் ஆணையத்திற்கு அதன் செயல்பாடுக ளுக்காக ஊதியம் அளிக்கப்படுகிறது. அதனை, தேர்தல் ஆணையத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. குறைந்த பட்சப் பொது செயல் திட்டத்துடன் (Common Minimum Programme) ஒத்துப்போகக்கூடிய விதத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தால் இயற்றப்பட்ட ஒரிஜினல் சட்டமுன்வடிவின் அதிகாரங்களை நீர்த்துப்போகச் செய்வதற்கு முயற்சிக்காதீர்கள். நாட்டின் கூட்டாட்சி அமைப்புமுறையை பலவீனப்படுத்த முயற்சிக்காதீர்கள். மாநில சுயாட்சியைப் பறித்திட முயற்சிக்காதீர்கள். இந்தச் சட்டமுன்வடிவைத் திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு பி.ஆர். நடராஜன் பேசினார். (ந.நி.)