புதுதில்லி:
மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கக்கூடிய அளவிற்கு ஜிஎஸ்டி தொகை, வசூலாகவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக்குழுத் தலைவர் பி.ஆர். நடராஜன் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் திங்கள்கிழமையன்று தொடங்கியது. கேள்வி நேரத்தின்போது பி.ஆர். நடராஜன், ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட சமயத்தில் அதன்மூலம் வரக்கூடிய வருவாய் குறித்து மதிப்பிடப்பட்ட தொகை வசூலானதா? அவ்வாறான மதிப்பீட்டின்படி எதிர்பார்த்த தொகை, வசூலான தொகை மற்றும் நிலுவைத்தொகை இன்றைய தேதியில் என்ன என்றும், ஜிஎஸ்டி தொகைகளை கார்ப்பரேட்டுகள் மற்றும் கம்பெனிகள் அளிக்காமல் நிலுவை வைத்திருக்கின்றனவா? அதன் விவரங்கள் என்ன? கடந்த மூன்றாண்டுகளாக மாநில அரசாங்கங்களுக்குத் தரவேண்டிய செஸ் மூலம் வசூலான தொகை மற்றும் ஜிஎஸ்டி தொகை எவ்வளவு என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர், அனுராக் சிங் தாகூர், சமூக முடக்கத்தின் காரணமாக ஆண்டு வரவு-செலவு (turn over) 5 கோடி ரூபாய் வரை உள்ளவர்களுக்கு இவை தொடர்பாக அறிக்கைகள் தாக்கல் செய்வதிலிருந்து செப்டம்பர் வரை விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது . ஜிஎஸ்டி இழப்பீட்டு செஸ் மற்றும் ஜிஎஸ்டி இழப்பீட்டு வசூல் தொடர்பான விவரங்கள் தனியே இணைப்பாக அளிக்கப்பட்டிருக்கின்றன. ஜிஎஸ்டி வசூலான தொகை, மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கக்கூடிய விதத்தில் போதுமான அளவிற்கு வசூலாகவில்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். (ந.நி.)