தஹில் ரமணி ராஜினாமா
சென்னை, செப்.7- சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி தனது பதவியை ராஜினாமா செய்வதாக சனிக்கிழமையன்று கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்பி வைத்தார். மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி யாகப் பணியாற்றிய தஹில் ரமணி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சென்ற ஆண்டு ஆகஸ்ட் 8 அன்று பதவி உயர்வு பெற்று பதவி ஏற்றிருந்தார். இவரை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான கொலிஜியம் ஆகஸ்ட் 28 அன்று மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றிப் பரிந்துரைத்திருந்தது.
மும்பை, சென்னை போன்ற மிகப்பெரிய உயர்நீதிமன்றங்களில் பணிபுரிந்து அனுபவம் பெற்ற நீதிபதி தஹில் ரமணி, தற்போது மிகவும் சிறிய அளவிலான மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப் பட்டிருப்பதை, ஒரு தண்டனை போன்றே கருதினார். வெள்ளிக்கிழமையன்று வழக்கு ரைஞர்கள் அளித்த தேநீர் விருந்தின்போது தன் மனக்குறையை அவர் வெளிப்படுத்தி யிருந்தார். தன் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும் கூறியிருந்தார். அதேபோல் சனிக்கிழமை தன் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
இந்தியாவின் மூத்த நீதிபதிகளில் ஒருவரான இவர், தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள இரண்டு பெண் நீதிபதிகளில் ஒருவராவார். இவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய போது 2017ஆம் ஆண்டு பில்கிஸ் பானு பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித் திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு நியமிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தஹில் ரமாணி கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், அவரது கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது அவர் தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
கொலிஜியம் முடிவுக்கு வழக்கறிஞர் சங்கம் கண்டனம்
இந்நிலையில் நீதிபதி தஹில் ரமணி ராஜினாமா முடிவுக்கு காரணமான உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் முடிவுக்கு அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சோம் தத்தா சர்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதேபோல, அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் என்.முத்து அமுதநாதன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், “மூத்த நீதிபதியான தஹில் ரமணியை, வரலாற்றுப் புகழ்பெற்ற சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுபபிலிருந்து வெறும் 3 நீதிபதிகளே உள்ள மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்வது பழிவாங்கும் நடவடிக்கை யாக இருக்குமோ என சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். (ந.நி.)