குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இச்சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துள்ளது.
மோடி தலைமையிலான பாஜக அரசு இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தும் வகையில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் இஸ்லாமியர்கள் அல்லாத பிற மதத்தை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத்தை திருத்தியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தது. அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம், ஜாமியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்த சட்டத்தை எதிர்த்து திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சியின், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்கள் தரப்பிலும் மொத்தம் 59 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. குடியுரிமை திருத்த சட்டம், சட்டவிரோதம் என அறிவிக்க கோரி இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் அனைத்தும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்ய காந்த் ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று ஒன்றாக இணைத்து விசாரிக்கப்பட்டன. அப்போது, மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். அதேசமயம், இந்த சட்டம் தொடர்பாக, மத்திய அரசு ஜனவரி 22ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர். வழக்கின் விசாரணையையும் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.