tamilnadu

img

மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தும் 1313 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்

மும்பை:
மக்களவைத் தேர்தல் முடிவுகளில் பாஜக அபார வெற்றி பெற்றும், மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தையான நிப்டி ஆகியவை கடும் சரிவைச் சந்தித்து இருப்பது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வியாழனன்று காலை மும்பை பங்குச்சந்தையில், சென்செக்ஸ் 39,591 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. இது ஏற்றமாகவே பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பாராத வகையில், மாலையில் சென் செக்ஸ் 1313 புள்ளிகள் சரிந்து 38,811 புள்ளிகளுக்கு வர்த்தகமாகியுள்ளது.புதன்கிழமையன்று மாலை சென்செக்ஸ் 39,110 புள்ளிகளுக்கு நிறைவடைந்திருந்தது. ஆனால் வியாழனன்று காலை வர்த்தக நேர தொடக்கத்திலேயே சுமார் 500 புள்ளிகள் உயர்ந்தது. அப்படியே அதிகரித்த சென்செக்ஸ் சுமார் 1000 புள்ளிகள் அளவிற்கு அதிகரித்து 40,124 என்ற உச்சத்தையும் தொட்டது. ஆனால்,திடீரென அச்சமடைந்த வர்த்தகர்கள் தங்கள்முதலீடுகளை விற்கத் துவங்கியதால், மீண்டும் சந்தை புள்ளிகள் சரிந்து 38,811 புள்ளிகளுக்கு இறங்கியுள்ளது.

அதே போல் நிப்டியும் காலை 11,901 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி மாலையில் 11,657 புள்ளிகளாக சரிந்துள் ளது. சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 15 பங்குகள் இறக்கத்திலும், 15 பங்குகள் ஏற்றத்திலும், நிப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 27 பங்குகள் இறக்கத்திலும், 27 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாகி இருக்கின்றன. பி.எஸ்.இ-யில் இருக்கும் 2,687 பங்குகளில் 1,186 பங்குகள் ஏற்றத்திலும், 1325 பங்குகள் இறக்கத்திலும், 176 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகியுள்ளன. 

நிப்டியில் இன்ப்ராஸ்ட்ரக்சர், மீடியா, ரியாலிட்டி, பொதுத் துறை நிறுவனங்கள் போன்ற துறை சார்ந்த இண்டெக்ஸ்கள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. மற்ற அனைத்துதுறை சார்ந்த பங்குகளும் இறக்கத்தில் வர்த்தகமாயின. மேலும் எஸ்பிஐ, ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க், இண்டஸ் இந்த்பேங்க், ஹெச்டிஎப்சி வங்கி போன்றவற்றின் பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின. அதானி போர்ட்ஸ், ஜிஎண்டர்டெயின்மெண்ட், இண்டஸ் இந்த்பேங்க், க்ராசிம், சிப்லா போன்ற நிறுவனப்பங்குகள் சுமார் 2.50 சதவிகித விலை ஏற்றத்தில் வர்த்தகமாகின.