மும்பை:
மும்பை பங்குச் சந்தை கடந்த2 வாரங்களுக்கும் மேலாக அடிவாங்கி வந்தது. வெள்ளிக்கிழமையன்று 30 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழே அதல பதாளத்திற்கு சென்று திரும்பியது. தற்போது 34 ஆயிரம் புள்ளிகள் என்ற நிதானமான கட்டத்திற்கு வந்துள்ளது.எனினும், கடந்த 4 நாட்களில் விழுந்த தொடர்ச்சியான அடியால்,பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் சுமார் 15 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பைச் சந்தித்திருப்பது தெரியவந்துள்ளது.கடந்த மார்ச் 6 அன்று மும்பை பங்குச் சந்தையின் மதிப்பு சுமாராக144 லட்சத்து 31 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் ஒரே வாரத்தில், மார்ச் 13 அன்று 129 லட்சத்து 26 ஆயிரம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது.இதன்காரணமாக, மும்பைபங்குச் சந்தை, வெள்ளிக்கிழமையன்று பங்குகளை சந்தையில் வெளியிடுவதையே, சுமார் 45 நிமிடங்களுக்கு நிறுத்தி வைத்த சம்பவமும் அரங்கேறியது.
கடந்த திங்கட்கிழமையன்று பங்குச் சந்தை சுமார் 1,942 புள்ளிகள்வீழ்ச்சி அடைந்தது. அப்போது பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.7 லட்சம் கோடிக்கு மேல் சரிவடைந்தது. இதில், இந்தியாவின் முதற்பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி மட்டும் சுமார் 42 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பைச் சந்தித்தார். அதுவரை, ஆசியாவின் முதற்பெரும் பணக்காரராக அம்பானிஇருந்தார். ஆனால், திங்களன்று ஒரே நாளில், அந்த இடத்தை இழந்தார். உச்சத்தில் சென்றுகொண்டிருந்த முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தின் பங்குகளும், பங்குச் சந்தையில் அடியிலிருந்து தப்பவில்லை.