tamilnadu

img

2019-இல் உலகிலேயே அதிகம் சம்பாதித்த அம்பானி... ‘போர்ப்ஸ்’ பத்திரிகை தகவல்

புதுதில்லி:
அமெரிக்க - சீன வர்த்தகப் போர்,பொருளாதார மந்தம் போன்றவற்றால், உலக நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஜிடிபி 4.5 சதவிகிதத்திற்கும், 5 சதவிகிதத்திற்கும் இடையே ஊசல் ஆடிக் கொண்டிருக்கிறது.

ஆனால், இவ்வளவு பிரச்சனைகளுக்கு இடையிலும், 2019-ஆம் ஆண்டில் உலகிலேயே அதிகம் சம்பாதித்த பெரும்பணக்காரர் என்றால், அவர் இந்தியாவின் முகேஷ் அம்பானிதான் என்று ‘போர்ப்ஸ்’ நாளிதழ் கூறியுள்ளது.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு, 2019-ஆம் ஆண்டில் மட்டும் 16.1 பில்லியன் (சுமார் ரூ. 1 லட்சத்து 17 ஆயிரம் கோடி) டாலர்அளவுக்கு உயர்ந்துள்ளது. டிசம்பர் 2019 நிலவரப்படி, முகேஷ் அம்பானியின் ஒட்டுமொத்தமான நிகர சொத்துமதிப்பு 61.4 பில்லியன் டாலராக இருக்கிறது. இரண்டாவது இடத்தில் லாஸ் ஏஞ்செலஸ் கிளிப்பர்சின் நிறுவனர் ஸ்டீவ் பால்மேர் இருக்கிறார். அதிகம் இழந்தவர்களின் பட்டியலில், ஸால் ஸ்மார்ட் வர்த்தகக் குழுமத்தின் நிறுவனர் யான் ஸி முதலிடத்தில் இருக்கிறார். ஊபரின் இணை நிறுவனர் டிராவிஸ் கலானிக்கின் இரண்டாவது இடத்தில் உள்ளார். சொத்துக்களை இழந்தவர்களின் பட்டியலில், அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ், விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.