tamilnadu

img

குறுவை சாகுபடிக்கு அரசு செய்ய வேண்டியது என்ன?- சாமி.நடராஜன்

ல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக மேட்டூர், அணை ஜூன் 12அன்று திறக்கப்படும் என மாநில முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த 18ந் தேதி அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணை பாசனத்திற்காக, ஜூன் 12 அன்று திறந்து ஜனவரி 28ந் தேதி அணை மூடப்பட வேண்டும். இந்நிலையில் குறுவை சாகுபடிக்காக 2008ம் ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 12ல் திறக்கப்பட்டது. அதன் பிறகு 2011ம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதியே முன்கூட்டி பாசனத்திற்காக திறக்கப்பட்டது. இடைப்பட்ட 10 ஆண்டுகளில் காலம் கடந்து தான் அணை பாசனத்திற்காக திறக்கப்பட்டது.

 இதன் காரணமாக ஆற்று பாசனத்தை மட்டும் நம்பியுள்ள விவசாயிகள் குறுவை சாகுபடிகளை இழந்து பெரும் பொருளாதார இழப்பை சந்தித்தனர்.  இந்நிலையில் தற்போது மேட்டூர் அணையில் 100 அடி தண்ணீர் தொடர்ந்து இருந்து வரும் நிலையில், தென்மேற்கு பருவமழையும் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் என்ற அறிகுறி தெரிவதாலும் தமிழக அரசு நடப்பாண்டு குறுவை சாகுபடிக்கு ஜூன் 12 அன்று அணையை திறப்பது மகிழ்ச்சி தான். இருப்பினும் டெல்டா மாவட்டங்களில் முழுவீச்சில் குறுவை சாகுபடி நடைபெற தமிழக அரசு கீழ்க்கண்ட அம்சங்களில் சிறப்பு கவனம் செலுத்தி செயல்படுத்த வேண்டும்.

நீர்நிலைகள் செப்பனிடுதல்
தமிழகம் முழுவதும் குடிமராமத்து பணிகளுக்கு ரூ.499 கோடி நிதி அரசு ஒதுக்கியுள்ளது. டெல்டா மாவட்டங்களுக்கு மட்டும் பாசன ஆறுகள், வாய்க்கால்களை தூர்வாரிட ரூ,69.24 கோடி நிதி ஒதுக்கி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முழுவதும் தண்ணீர் வருவதற்கு முன் முடிக்கப்பட வேண்டும். பணிகள் நடைபெறும் ஒவ்வொரு இடத்திலும் அப்பணிகளுக்கான திட்டமதிப்பீட்டின் படி முறைகேடுகள் இல்லாமல் நடைபெறுவதை உத்திரவாதப்படுத்திட அந்தந்த பகுதி விவசாயிகளை கொண்ட கண்காணிப்புக்குழுகள் அமைத்திட வேண்டும். கிராமங்களில் உள்ள சி, டி, பிரிவு பாசன வாய்க்கால்கள் அனைத்தையும் 100 நூறு நாள் வேலை பணியாளர்கள் மூலம் முழுவதும் செப்பனிட வேண்டும். இப்பணிகள் தொய்வின்றி, நடந்தால்தான் கடைமடைப் பாசனப்பகுதி வரை தண்ணீர் செல்லும். டெல்டா மாவட்டம் முழுவதும் சுமார் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறுவதை உத்தரவாதப்படுத்த முடியும்.

குறுவை தொகுப்பு திட்டம்
கடந்த சில ஆண்டுகளில் சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்படாத சூழலில் தமிழக அரசு ஆழ்குழாய் மூலம் சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் குறுவை தொகுப்பு திட்டம் அறிவித்தது. அதன் மூலம் உழவு மானியம், விதை நெல் மானியம், நுண்ணுயிர் உரங்கள் உள்ளிட்ட தொகுப்புத் திட்டத்தை செயல்படுத்தியது போல இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கினால் முடங்கியுள்ள விவசாயிகளுக்கு ஊக்கமளிக்க டெல்டா மாவட்டம் முழுவதும் பயன்பெறும் வகையில் குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்து செயல்படுத்த வேண்டும்.

விதை - உரம் இடுபொருட்கள்
குறுகிய கால விதை நெல் (105 நாட்கள்) வேளாண்மைத்துறை மூலம் அனைத்து டெப்போக்களிலும் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும். இந்த குறுவை பட்டத்திற்கான விதைகள் ஹளுகூ 16, கோ 51, ஹனுனு-36 விதைகள் தட்டுப்பாடின்றி கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தற்போது, அறிமுகமாகி 10 ஆண்டுகள் கடந்த விதை நெல்களுக்கு மானியம் நிறுத்தப்பட்டுள்ளது. புதிதாக வந்த விதை நெல் ரகத்திற்கு மட்டும் மானியம் வழங்கப்படுகிறது. நடப்பாண்டு அனைத்து ரக விதை நெல்லுக்கும் தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும்.

ஒரே நேரத்தில் சாகுபடி பணிகள் நடைபெறவுள்ள நிலையில் விவசாயத்திற்கு தேவையான கூஹஞ, பாடக்டம்பாஸ், பொட்டாஷ், யூரியா உள்ளிட்ட உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் தடையின்றி கிடைப்பதை உத்திரவாதப்படுத்த வேண்டும், மேலும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பதை உறுதிப்படுத்த  வேண்டும். தனியார் உரக்கடைகளில் அரசு நிர்ணயித்த விலையில் உரங்கள் விற்பனை செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

நிபந்தனையற்ற பயிர்க்கடன்
சாகுபடி பணிகளை மேற்கொள்ள விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர்க்கடன் கேட்டு வரும் அனைத்து விவசாயிகளுக்கும் நிபந்தனையற்ற பயிர்கடன் வழங்கிட வேண்டும், தற்போது கூட்டுறவு சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 95 சதவீதம் பயிர்கடன் நகையீட்டு கடனாகத்தான் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையை மாற்றி சாகுபடிக்கான ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு பயிர்கடனாக மட்டும் வழங்கப்பட வேண்டும். ஏழை, சிறு,குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில கடன் வழங்கிட வேண்டும். கொரனா கால ஊரடங்களால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு நடப்பாண்டு நபார்டு வங்கி தமிழகத்திற்கு கூட்டுறவு வங்கிகளுக்கு 1000  கோடியும், தமிழ்நாடு கிராம வங்கிகளுக்கு 475 கோடியும் சலுகை மறுநிதி அளிக்க முன்வந்துள்ளது. இவை அனைத்தும் விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்க பயன்படுத்தப்பட வேண்டும்.

நீர் திறப்பும் - பெறுவதும் 
தற்போது அணையில் உள்ள நீர் இருப்பின்படி 50 முதல் 60 நாட்களுக்குத்தான் ஒரு நாளைக்கு 1/3 டி.எம்.சி. (அல்லது) 1 டி.எம்.சி. மூலம் தண்ணீர் திறக்க முடியும். பருவ மழை கைகொடுக்காவிட்டால் நிலைமை மோசமாகி விடும். எனவே காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் படி காவிரியில் தமிழகத்திற்கு மாதந்தோறும் கிடைக்க வேண்டிய தண்ணீரை ஜூன் மாதம் முதல் பெறுவதற்கான நடவடிக்கைகளையும் தமிழக அரசு தொடங்கிட வேண்டும். அதற்கான முதல்படியாக உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் உடன் நடத்தப்பட வேண்டும்.
மேலும் அணை திறக்கப்பட்டத்திலிருந்து ஒரு மாத காலத்திற்கு முறைப்பாசனத்தை செயல்படுத்தாமல் அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் திறந்து நாற்று விடும் பணிகள் தடைபடாமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் பொதுப்பணித்துறை, வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை இம்மூன்றும் ஒருங்கிணைந்து முனைப்புடன் செயல்படுவதன் மூலமே நடப்பாண்டு டெல்டா மாவட்டங்களில் அரசின் இலக்கை குறுவை சாகுபடியில் எட்டமுடியும்.

கட்டுரையாளர் : மாநில செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்