tamilnadu

img

கோவிட்-19 புதிய மருந்து பயன்பாடு.... அரசு செய்ய வேண்டியது என்ன? - க.ஆனந்தன்

இந்தியாவின் செய்தி ஊடகங்கள் கடந்த வாரம் இந்தியாவில், கொரோனா தொற்றுக்கு புதிய மருந்து ஒன்றைப் பற்றி பிரச்சாரம் செய்தன. “ரெம்டெஸ்விர்(Remdesvir)” என்பதே அந்த மருந்தின் பெயர். அமெரிக்காவின் பிரம்மாண்டமான மருந்து உற்பத்தி நிறுவனமான கிலியாட் என்ற நிறுவனம் தயாரிக்கும் மருந்து அது. ஏற்கனவே, அமெரிக்க ஜனாதிபதியின் தவறான, ஏன் முட்டாள்தனமான யோசனையால், சில காலம் மலேரியா மருந்தான குளோரோ குயின் சிகிச்சை என்று ஊடகங்கள் சொல்லி வந்தன. ஆனால் அந்த மருந்துக்கு, எதிர்பார்த்த நோய் குணமாக்கல் இல்லை, மாறாக, அதனால் பல எதிர் விளைவுகள் ஏற்பட்டன. ஆகவே தற்போது அந்த மருந்து குறித்து ஊடகங்கள் அமைதியாகிவிட்டன.

கிலியாட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டேவிஸ் ஓ டே வெள்ளைமாளிகையில் ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து, அமெரிக்க அரசின்நோய் எதிர்ப்பு நடவடிக்கைக்கு 1.5 மில்லியன் குப்பிகள் இந்த மருந்து அளிப்பதாக தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதி இந்த நிறுவனத்தை புகழ்ந்தார். தற்போது இந்தியாவிலும் இந்தமருந்து பயன்பாட்டிற்கு வர உள்ளது.ஆகவே இதில் இந்திய அரசு மேற் கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்துவிவாதிக்கவே வேண்டியுள்ளது.

அமெரிக்காவின் கிலியாட் நிறுவனம், 2010 ல் எபோலா நோய் சிகிச்சைக்குத்தான் “ரெம்டெஸ்வியர்” என்ற மருந்தை தயாரித்தது. தற்போதுஅந்த மருந்தை கோவிட்-19 சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என தெரிவிக்
கிறது. இந்த மருந்து எவ்வாறு குணப்படுத்தும் என்பது குறித்து ஆய்வுகள் விரிவாக மேற் கொள்ளும் முன், ஒரு ஏமாற்று முயற்சியை இந்த நிறுவனம் மேற்கொள்ள முயன்றது. அமெரிக்காவில்  ஆர்பின் ஆக்ட்என்ற சட்டம் உள்ளது. மிகவும் ஆபத்தான, அதே சமயம், மிகவும் குறைவானபேர்கள் ஒரு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கான பிரத்யேக மருந்து தயாரிக்கும் நிறுவனம், 7 ஆண்டுகள் ஏகபோகமாக மருந்து தயாரிக்கலாம் என்பதே இந்த சட்டத்தின் நோக்கம்.மிகவும் குறைவான நபர்கள் பாதிக்கப்பட்ட நோய்க்கு பல நிறுவனங்கள் இறங்கினால், போதுமான லாபம் இன்றி பின்னர் அனைவரும் சந்தையை விட்டு சென்று விட்டால் நோயாளிகள் பாதிக்கப்படுவர் என்பதற்காக இந்த சட்டம்.

மிகவும் அரிய நோய்  தொற்று சட்டமான ஆர்பன் ஆக்ட் சட்டத்தைப் பயன்படுத்தி, மிக அதிக அளவில் பாதிப்பு ஏற்படுத்தியுள்ள கொரோனா தாக்கத்திற்கு, தனது மருந்தான “ரெம்டெஸ்விர்க்கு” 7 ஆண்டுகள் ஏகபோகம் பெற முயன்றது கிலியாட் நிறுவனம். வெள்ளை மாளிகையும் அதற்கு உடந்தையாக இருந்தது. ஆனால், இதற்கு எதிராக மக்களிடையே எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக ஜனநாயக கட்சியின் வேட்பாளர் போட்டியில்இருந்த, செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் இதற்கு எதிராக கடும் கண்டனங்களை எழுப்பினார்.  அரசு கஜானாவிலிருந்து பல பில்லியன் டாலர்களை பெற்றுக் கொண்டு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள், பின்னர் காப்புரிமை சட்டத்தின் படி ஏகபோக உரிமை பெற்று கொள்ளை லாபம் அடிப்பதை அவர் கண்டித்தார்.எதிர்ப்பின் காரணமாகவும், சட்டத்தின் ஓட்டைகளை சாதகமாக்கிக் கொள்ளமுயன்றது அம்பலப்பட்டு போனதாலும், அந்த சட்டத்தின்படி விதிவிலக்கு பெறுவதிலிருந்து அந்த நிறுவனம் தற்போது பின் வாங்கியுள்ளது. 

ஆனால், மற்றொரு பி ஆர் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதுவே 1.5 மில்லியன் குப்பிகள் இலவசமாக அமெரிக்காவிற்கு வழங்கும் திட்டம். அதனால் சுமார் ஒன்றரை லட்சம் நோயாளிகள் பயன் பெறுவர். உலகம் முழுவதும் ஒரு நோய்க்கான மருந்தை அலோபதியில் பரிந்துரைப்பதற்கு முன் பல நூறு ஆயிரம் பேர்களிடம் அது பயன்படுத்தப்பட்டு, அதன் சாதக பாதக அம்சங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டு அதன் சாதகங்கள் அதிகமாக இருக்கும் பட்சத்திலேயே அந்த மருந்து அந்த நோய்க்கான சிகிச்சையாக பரிந்துரைக்கப்படுகிறது. 

அந்த வகையில், இந்த மருந்தை 1.5 லட்சம் பேர்கள் பயன்படுத்துவது மிக அதிகமான தரவுகளை இந்த நிறுவனத்திற்கு இது அளிக்கும் என்பது நிதர்சனம். இதுவரை இந்த மருந்திற்கான ஆய்வுகள் தெரிவிப்பது என்னவெனில், இந்த மருந்து கொரோனா சிகிச்சை காலத்தை 15 நாட்களிலிருந்து 11 நாட்களாக குறைத்துள்ளதாம். அதே சமயம், உயிர் காத்தல் என்பதில் மிகப் பெரிய மாற்றம் இல்லைஎன்ற கருத்தையும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். விரைவில் குணமாவதால், முக்கிய உடலுறுப்புகள் பாதிப்புதடுக்கப்படுவதால், இறப்பு கட்டுப்படுவதாகத் தெரிவிக்கின்றனர். 

ஆகவே, தற்போது “அவசரநிலை மருந்து” என்பதிலிருந்து இந்தமருந்தை “பொதுவான சிகிச்சைமருந்து” என எப்டிஏ அனுமதித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கென்றே பிரத்யேகமான முதல் மருந்தாக “ரெம்டெஸ்விர்” வந்துள்ளது. இதுவேகடைசி மருந்து அல்ல. இதர நிறுவனங்களும் தங்களின் பல தயாரிப்புகளை கொண்டு வர இருக்கின்றன. இந்த மருந்தை சந்தைப்படுத்த, அமெரிக்க நாடாளுமன்றத்தின் தேவை
யான அனைத்து அனுமதிகளையும் பெற, இந்த நிறுவனம், லாபியிங்குக்காக இதுவரை 2.4 மில்லியன் அமெரிக்க டாலர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு செலவு செய்துள்ளது.

நடப்பாண்டில் இந்த மருந்தின் மூலம், கிலியாட் நிறுவனம் 11 பில்லியன்டாலர் (77000 கோடி ருபாய்) வருவாய் ஈட்ட  திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில்தான் இந்த மருந்து இந்தியாவிற்கும் வர இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.  இங்கும் சிகிச்சை தொடங்கும். இந்தியாவிற்கு இந்த மருந்து இலவசமாக வருகிறதா அல்லது என்ன விலை என்பன போன்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.  
அக்சஸ் ஐபிஎஸ்ஏ (ACCESS IBSA) என்ற நிறுவனத்தின், இந்திய ஒருங்கிணைப்பாளர், அச்சல் பிரகலாத். அவர் நோபல் பரிசு பெற்ற பொருளாதாரவாதி ஜேசப் ஸ்டிக்லீஸ் வெளியிட்டுள்ள  பேட்டண்ட் வெர்சஸ் பண்டமிக் (Patents  Vs Pandemic) என்ற புத்தகத்தின் இணை ஆசிரியர். இந்தியா, பிரேசில், தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் மக்களுக்கு மருந்து வாங்கும் விலையில் கிடைத்தல் என்பதற்காக முயலும் அரசு சாரா அமைப்பாகும் இது.
அச்சல் பிரகலாத், அமெரிக்க அரசு கிலியாட் நிறுவனத்திற்கு அனுமதி அளித்திருப்பது ஆச்சரியமளிக்கிறது என்கிறார்.  ஏனெனில் அமெரிக்க அரசுகிலியாட் நிறுவனத்தின் மீது மற்றொருமருந்து  குறித்து வழக்கு தொடர்ந்துள்ளது என்கிறார். 

“டிரவேடா” என்றொரு மருந்து. இது அமெரிக்க அரசு நிறுவனமான சிடிசிகண்டு பிடித்த மருந்து. இது ஹெச்.ஐ.வி.நோய் தடுப்பிற்கான மருந்து. அரசின் கண்டுபிடிப்பான இந்த மருந்தை தனதுமருந்தாக அது சந்தையில் விற்கிறது. இதற்கு எதிராக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது என்கிறார்.இந்தியாவில் ஒரு மாதத்திற்கு  25டாலர் செலவாகும் இந்த மருந்து அமெரிக்காவில் கிலியாட் நிறுவனத்தால், 1800 டாலருக்கு விற்கப்படுகிறது. ஒரு புறத்தில் கொள்ளை அடிக்கும் விலை, மறுபுறத்தில் அரசுகண்டுபிடிப்புகளை சொந்தம் கொண்டாடுவது என்ற நடவடிக்கையில் ஈடுபடும் நிறுவனம் கிலியாட் என பிரகலாத் தெரிவிக்கிறார். 
பிரேசில் நாட்டில் மஞ்சள் காமாலையில் ஹெப்படிடீஸ் சி என்பது மிகவும் அதிகமான பேர்களை பாதித்துக் கொல்கிறது. இதற்கு எதிராக “சவால்டி” என்ற மருந்தை கிலியாட் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.ஆரம்பத்தில் குறைவான விலைக்கு சப்ளை செய்த நிறுவனம், தற்போது இந்த மருந்தின் விலையை 84000 அமெரிக்க டாலர்கள் என விற்கிறது. பிரேசில் நாட்டில் ஜேசப் லூலா போன்றவர்கள் ஆட்சியின் காரணமாக, மருத்துவம் பொது மருத்துவமாக, அரசு செலவில் இலவச மருத்துவமாக உள்ளது. 

ஆனால், இம்மருந்திற்கு, இந்தநிறுவனத்தின் அநியாய விலை காரணமாக, பிரேசில் அரசாங்கத்தாலேயே போதுமான அளவு இந்த மருந்தை வாங்க இயலவில்லை. இதனால் பலரும் உயிரிழக்க நேரிடுகிறது. நோய் தொற்று அதிகமாக உள்ள இந்த நேரத்தில், புதிய மருந்தான இந்த“ரெம்ஸ்டிவிர்” மருந்தைப் பயன்படுத்தஅனுமதிக்கும் அதே வேளையில்,  இந்திய அரசு, அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்த மருந்தின் உச்சபட்ச விலையை குறைத்து நிர்ணயிக்க வேண்டும்.  ஜெனரிக் மருந்து உற்பத்தியை தொடங்க இந்திய அரசு இந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும். 

அடுத்து அடுத்து நிறுவனங்கள் கொண்டு வரும் கொரோனா தொற்றுக்கான மருந்துகளையும் அவை உலகின் எந்த பகுதியிலிருந்து வந்தாலும், அமெரிக்காவின் நிர்ப்பந்தங்களுக்கு பணியாமல் அவற்றையும் இந்திய அரசு போதுமான பாதுகாப்புடன் அனுமதிக்க வேண்டும். கொரோனா கிருமியின் தாக்கம் குறைந்தது 2வருடங்களுக்கு இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அரசு இதனை கருத்தில் கொண்டுஉரிய நடவடிக்கை எடுக்காவிடில், காப்புரிமை சட்டங்களை காரணம் காட்டி, இந்தியாவில் இந்த நிறுவனம், தனது மருந்தை கொள்ளை லாபத்திற்குவிற்கத் தொடங்கிவிடும். டிரம்ப் அரசின்நிர்பந்தங்களுக்கு பணிந்து போகாமல்,அரசு இந்த மருந்து விஷயத்தில் கடந்த அரசுகளைப் போல் இந்தியாவின் தேவைகளை, உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும்.