கடல் மட்டத்திலிருந்து 8000 அடி உயரமான அந்த மலைப்பகுதியில், மடிப்புகளாய் விரிந்திருக்கும் பச்சை நிற மலைகள். சிலுசிலுத்து ஓடும் நீலநிற ஆறு. அவ்வப்போது மாறும் வானிலை. பெரும் அமைதி சூழ்ந்திருக்கும் பள்ளதாக்கு. திட்டுத் திட்டாய் ஆங்காங்கே மலைச் சரிவுகளில் தென்படுகிற கிராமங்கள். ஈரம் படிந்திருக்கும் பசுமையான விவசாய நிலங்கள். தேயிலை செடிகள், உருளைக்கிழங்கு, கேரட், முட்டைக்கோஸ், காலிஃபிளவர் உள்ளிட்ட மலைகாய்கறி விவசாயம். மெலிதாக ஓடும் சில்லஹல்லா ஆற்றின் கரை நெடுகிலும் காணும் காட்சிகளே இவையெல்லாம்.
இந்த சில்லஹல்லா ஆற்றின் மீதுதான் புதிதாக ஒரு நீர் மின்திட்டத்தை உருவாக்குவதற்கான ஆயத்தப் பணிகளை துவங்கியுள்ளது அரசு. அதிகரித்து வரும் மின்சாரத் தேவைகளுக்கு ஈடுகொடுக்க இத்தகைய புதிய திட்டங்கள் தேவை என அரசுத் தரப்பிலும், பாதுகாக்கப்பட வேண்டிய உயிர்ச் சூழல் மண்டலமான நீலகிரி மேலும் ஒரு அணையையோ, மின் உற்பத்தி திட்டத்தையோ தாங்கும் நிலையில் இல்லை என மக்கள் தரப்பிலும் இருவேறு கருத்துகள் நிலவி வருகிறது. இந்நிலையில் சில்லஹல்லா திட்டம் குறித்து தெரிந்து கொள்ள, அந்த பசுமைகாட்டுக்குள் ஒரு பயணம் போய் வரலாம் வாருங்கள்.
சில்லஹல்லா திட்டம்
உதகைக்கு 20 கி.மீ தொலைவில் மந்தனை எனும் பகுதியில் சில்லஹல்லா ஆற்றின் குறுக்கே 260 அடி உயரத்தில் ஒரு மேலணையும், குந்தா பாலம் பகுதியில் குந்தா ஆற்றின் குறுக்கே 350 அடியில் ஒரு கீழணையும் கட்டப்பட்டு, இரு அணைகளுக்கும் இடையில் பெரும் ராட்சத குழாய்கள் மூலம் இணைப்பை உருவாக்கி தண்ணீரை பம்ப் செய்து 4 மின் உற்பத்தி அலகுகள் மூலம் தலா 250 மெகாவாட் என மொத்தம் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டமே சில்லஹல்லா நீர் மின்திட்டம் சில்லஹல்லா ஆற்றில் மழைப்பொழிவின் போது வரும் கூடுதலான நீரை அணையின் மூலமாக தேக்கி வைத்து அதன் மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இத்திட்டத்திற்கான தொகை மதிப்பீடு ரூ. 4,952 கோடி மின்பயன்பாடு அதிகமாக உள்ள நேரங்களில் மின்சார உற்பத்தியை மேற்கொள்வது, இதர நேரங்களில் நீரை வெளியேற்றுவது எனும் தன்மையில் இதன் பணிகள் அமையும்.
இத்திட்டத்திற்கான அறிவிப்பை தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த போதே அறிவித்தார். ஆனாலும் நீண்ட காலமாக அறிவிப்பாக மட்டுமே இருந்த திட்டத்தின் பூர்வாங்கப் பணிகள் தற்போது துவங்கியுள்ளன. நிபுணர்களின் ஆலோசனைக்குழுவின் பரிந்துரைகளின் பேரில், திட்டத்திற்கான விதிமுறைகள் மற்றும் குறிப்புகளை இறுதி செய்வதற்கான முதல் கூட்டம் 2020 ஜூலை 29 அன்று நடைபெற்றுள்ளது. இத்திட்டம் அமலாக்கப்படும் போது உருவாகும் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, வனவிலங்குகள் பாதிப்பு அறிக்கை, விவசாய நிலங்களை எடுப்பது மற்றும் அதற்கான இழப்பீடு குறித்த மதிப்பீடு, திட்டத்திற்கான மொத்த நிலங்கள் குறித்த வரைவு ஆகிய அம்சங்கள் குறித்த முழுமையான விபரங்களை பெறுவது என அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் மற்றும் மக்களின் அச்சம்
இந்த நீர் மின்திட்டத்திற்காக விவசாயிகள் 900 ஏக்கர் பரப்பிலான தங்கள் விளைநிலங்களை நேரடியாக இழக்க வேண்டிய நிலை உருவாகும் எனும் கருத்தை முன்வைப்பதோடு, தங்களின் ஒரே வாழ்வாதாரமான விவசாயத்தையும் இழந்து விட்டு வேறென்ன செய்வது எனும் கேள்வியையும் எழுப்புகின்றனர். மேலும் கடந்த காலங்களில் குந்தா, எமரால்ட், அப்பர்பவானி, அவலாஞ்சி ஆகிய பகுதிகளில் நீர் மின்திட்டத்திற்காக தங்கள் நிலங்களை அளித்து விட்டு உரிய இழப்பீடு கிடைக்காமல் உள்ள நிலைமையையும் நினைவு கூறுகின்றனர். ஏனெனில் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் படுக சமூக மக்களாவர். படுக சமூக மக்களின் நிலங்களில் மிகக் கணிசமான நிலங்கள் இன்றளவும் கூட்டுப்பட்டாவாக உள்ளதால் இழப்பீடு பெறுவதில் பெரும் நடைமுறை சிக்கல் இருப்பதாகவும் சொல்கின்றனர்.
உதகைக்கு அருகில் உள்ள எம்.பாலாடா, கல்லக்கொரை, நுந்தளா, பாலகொலா, முதுகுளா, அப்புக்கோடு, துளிதலை, மணிஹட்டி, மீக்கேரி, பெம்பட்டி, பேலிதளா, தங்காடு, ஓரநள்ளி, கன்னேரி, மந்தனை ஆகிய கிராமங்களில் உள்ள மக்களின் விவசாயமும், அது சார்ந்த துணைத் தொழில்களும் பெருமளவில் பாதிப்பிற்குள்ளாகும் என்பதோடு இவற்றை நம்பியுள்ள 10,000 ற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் அப்பகுதி விவசாயிகளிடமும், மக்களிடமும் உள்ளது. ஏற்கனவே தேயிலைக்கு கட்டுப்படியான விலை கிடைக்காத நிலையில், மலைக்காய்கறி விவசாயத்தை பெருமளவில் நம்பியுள்ள தங்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகும் எனவும் கருதுகின்றனர். எனவே அரசு இத்திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை அவர்கள் முன்வைக்கின்றனர்.
சுற்றுச் சூழல் பாதிப்பு குறித்த அம்சங்கள்
நீலகிரி என்பது பாதுகாக்கப்பட வேண்டிய மிக முக்கியமான பசுமை மண்டலமாகும். யுனெஸ்கோ அமைப்பும் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாதவ் காட்கில் அறிக்கையும் இவ்வாறே வரையறை செய்கிறது. இங்கு உற்பத்தியாகும் சிறு நீரோடைகளும், ஆறுகளும் தான் சமவெளிப்பகுதிகளில் பெருமளவு விவசாயத்திற்கும், குடிநீருக்குமாக தேவைகளை நிறைவு செய்கின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் சுமார் பத்து லட்சம் ஏக்கர்பரப்பளவிலான விவசாயத்திற்கான நீரையும், பில்லூர் கூட்டுக் குடிநீர் திட்டம், அத்திக்கடவு கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட குடிநீர் திட்டங்களுக்கான நீரையும் தருகின்றன.
இந்நிலையில் மேலும் பசுமையை அழித்து இத்தகையதிட்டங்களை உருவாக்குவது மேற்கு மலைத்தொடர்ச்சியின் மழைப்பொழிவை பெருமளவில் குறைப்பதோடு, சுற்றுச் சூழலில் ஒரு பெரும் தாக்கத்தையும் உருவாக்கும் எனும்கருத்து முன்வைக்கப்படுகிறது. புதிய திட்டம் அறிவிக்கப்படும் இப்பகுதியில் ஏற்கனவே ஐந்து பெரிய நீர் மின் திட்டத்திற்கான அணைகள் இருப்பதால், மேலும் ஒரு பெரியஅணையை இப்பகுதி தாங்காது எனவும் அச்சத்தை முன்வைக்கின்றனர். மேலும் கடந்த 1978–79, 1992–93, 2008–09 ஆகிய ஆண்டுகளில் பெருமளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன எனவும் சுட்டிக் காட்டுகின்றனர்.
தடைசெய்யப்பட்ட கிராமங்கள்
இத்திட்டத்திற்கான இரு அணைகளுக்கும் இடையில் பூமிக்கடியில் சுமார் 4 கி.மீ தூரத்திற்கு ராட்சத குழாய்கள் பதிப்பதால் அதன் மூலம் நில அதிர்வும், சரிவும் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதாகவும் மக்கள் கருதுகின்றனர். எனவே சுற்றுச் சூழல் தாக்கம் மற்றும் பாதிப்பு குறித்த முழுமையான மதிப்பீட்டை மேற்கொள்ளாமல் இத்திட்டப் பணிகளை துவக்குவது மிகுந்த ஆபத்தில் போய் முடியும் என்பது மற்றொரு தரப்பினரின் கருத்தாக உள்ளது. மேலும் அண்மையில் நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு அபாயம் உள்ள ஆபத்தான பகுதிகள் (Vulnerable Areas) என மாவட்ட நிர்வாகம் 283 பகுதிகளை பட்டியலிட்டதோடு, அப்பகுதிகளில் வீடுகள் உள்ளிட்ட எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என தடை விதித்துள்ளது. இத்திட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள 9 கிராமங்கள் கட்டுமான பணிகளுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாகவும் உள்ளதால் இதுவும் மற்றொரு ஆபத்தான அம்சம் எனவும் சுட்டிக் காட்டுகின்றனர்.
தாவர இனங்கள் மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு
நீலகிரி மலைப்பகுதியில் மிகவும் அரிதான 80 வகையான உள்ளூர் தாவர இனங்களும், மரங்களும், 3000 வகையான புற்களும், 36 வகையிலான மலர்ச் செடிகளும் நிறைந்துள்ளதாகவும் இவையே மழைப் பொழிவிற்கான முக்கிய ஆதாரமாகவும் விளங்குவதாகவும் குறிப்பிடுகின்றனர். இத்திட்டத்தினால் இவை பெருமளவு பாதிப்பிற்குள்ளாகும் எனும் கருத்தும் நிலவுகிறது. மேலும் இத்திட்டப் பணிகளை மேற்கொள்ளும் பகுதிக்கு சுமார் 5 கி.மீ தொலைவில் முக்குருத்தி தேசிய வன விலங்கு பூங்காவும், புலிகள் காப்பக பகுதியும் வருகிறது. அண்மையில் முதுமலைப் பகுதியை தேசிய புலிகள் காப்பகமாக அறிவிக்கும் போது, அப்பகுதிக்குள் வசித்த பழங்குடி மக்களை அரசாங்கமே “தங்க கை குலுக்கல் திட்டம்” எனும் பெயரால் 30 கி.மீ தொலைவிற்கு அப்பால் சன்னக்கொல்லி எனும் இடத்திற்கு மாற்றி குடியமர்த்தியது. ஏனெனில் புலிகள் இரை தேடவும், இனப்பெருக்கம் செய்யவுமான பகுதிகளில் சுமார் 5 கி.மீ சுற்றளவில் மக்கள் வசிப்பதால் அவற்றிற்கு இடையூறு ஏற்படும் என சொல்லப்பட்ட நிலையில், வனவிலங்குகள் வசிக்கும் பகுதிக்கு மிக அருகில் இத்தகையதொரு திட்டத்தை அரசாங்கமே கொண்டு வரலாமா எனும் கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.
வனவிலங்குகள் வசிக்கும் பகுதிகளையொட்டி வசிக்கும் மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும் வனத்துறை இத்திட்டத்திற்கு மட்டும் இசைவு தெரிவிக்குமா எனும் சந்தேகங்களையும் மக்கள் எழுப்புகின்றனர். ஏற்கனவே காடுகளின் பரப்பளவு குறைந்து வரும் நிலையில் வனவிலங்குகளின் நடமாட்டம் மக்கள் வசிக்கும் பகுதிகளில் அதிகரிக்கும் நிலையில், இது மேலும் அத்தகைய நிலையை அதிகரிக்கும் என சொல்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சுமார் இருநூறு பேர் வனவிலங்கு தாக்குதல்களால் உயிரிழந்துள்ளனர் எனவும் பட்டியிலிடுகின்றனர்.
விரிவான கருத்து கேட்பு மிக அவசியம்
பொதுவாக நீலகிரியில் இத்தகைய திட்டங்களை அரசு அறிவிக்கும் போது விரிவான முறையில் மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்படுவதில்லை. அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் அளிக்கும் முன்மொழிவுகளையும் கண்டுகொள்வதில்லை எனும் நிலையே நீடிக்கிறது. 1990 இல் கூடலூர் – பந்தலூர் கொண்டு வரப்பட்ட தடைச் சட்டங்கள் (Belt Area Project), தனியார் காடுகள் பாதுகாப்பு திட்டம், யானை வழித்தடதிட்டம், புலிகள் காப்பக திட்டம், ஜென்மம் நிலங்களை வனத்துறைக்கு வழங்குவது உள்ளிட்ட எந்த திட்டங்களின் போதும் விரிவான கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இதனால் சோர்வு அடையும் மக்கள் வேறு வழியின்றி பெரும் போராட்டங்களில் பங்கேற்கின்றனர். எனவே தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சில்லஹல்லா நீர் மின்திட்டம் குறித்த விரிவான கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்தி அனைத்து தரப்பு மக்களின் கருத்துக்களையும் அரசாங்கம் கேட்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் கூட இத்திட்டம் குறித்த முழுமையான விபரங்கள் தங்களுக்கு தெரியாது என கைவிரிக்கும் நிலைதான் தற்போது உள்ளது. ஏற்கனவே உள்ள சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு (EIA 2020) குறித்த விஷயத்தில் மத்திய அரசு, மாநிலங்களை கேட்காமலேயே பெரும் மாற்றங்களை கொண்டு வந்த பின்னணியில் இத்திட்டம் குறித்த விவாதமும், பின்னணியும் முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில் வளர்ச்சிப் பணிகளுக்கான திட்டங்களுக்கும், சீரழிக்கப்படாத இயற்கை வளங்களுக்கும் இடையிலான சமநிலையை பாதுகாப்பதே ஒரு மக்கள் நல அரசின் தலையாய கடமையாக இருக்க முடியும்.