tamilnadu

img

வாய்க்கு சர்க்கரை வயித்துக்கு நெருப்பு -ஜி.செல்வா

காலந்தோறும் கல்விக் கொள்கை எவ்வாறு உருவாக்கப்பட்டது என உற்று கவனித் தோமானால், அது ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் ஆளும் வர்க்கத்தின் பொருளாதாரக் கொள்கை யின் பிரதிபலிப்பாகவே அமைந்திருப்பதைக் காணலாம். இந்தியாவில் ஆங்கில வழிக்கல்வியை திணித்த 1813 சாசனம், எண்ணத்திலும் அறிவாற்றலிலும் ஆங்கிலேய அடிமைகளை  உருவாக்க முயன்ற மெக்காலே கல்விக் கொள்கை, இதற்கு ஏற்றார் போன்று போதனா முறையை உருவாக்கிய 1854 சார்லஸ் உட் நடவடிக்கை, தேர்வுக ளைக் கண்டுபிடித்த 1882 ஹண்டர் கமிஷன். இத்தகைய குழுக்களின் பரிந்துரைகளோடு தான் அடிமை இந்தியா வில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் செயல்பட்டது.

சுதந்திர இந்தியாவில் நேருவின் பொருளாதாரக் கொள்கைக்கு உகந்தார்போன்று கல்வியில் நவீனமய மாக்கலை முன்மொழிவதற்கு 1964ல் அப்போதைய பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் டாக்டர் டி.எஸ் கோத்தாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு இரண்டு ஆண்டுகள்  , 12 உண்மை அறியும் குழுக்கள், ஏழு செயல் அமைப்பு குழுக்கள் என இயங்கி 9000 பேரிடம் பலவாறு கருத்தறிந்து 2400 பக்க அறிக்கையை 1966 ஜுன் 29 அன்று சமர்ப்பித்தது. இதுவே கோத்தாரிக் கல்விக்குழு என அழைக்கப்படுகிறது.  இதைத்தொடர்ந்து 1986-ல் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி இந்திய நாட்டை நாசகரமாக்க புதிய பொரு ளாதாரக் கொள்கையை திணித்தார். இதற்கு ஏற்றார் போல் புதிய கல்விக் கொள்கையை காங்கிரஸ் அரசு அறி முகப்படுத்தியது. இக்கல்விக் கொள்கைக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்களும் ஆசிரியர்களும் சமூக அக்கறை கொண்ட இயக்கங்களும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தின. நாடே போர்க்கோலம் பூண்டதுபோல மாறியது. கல்வி வியாபாரமயமாக்கல் சட்டரீதியாக ஊக்குவிக்கப்பட்டது. இந்திய நாட்டின் கல்விச் சந்தையைக் கூறுபோட்டு, பன்னாட்டு முதலாளிகளுக்கு வியாபாரம் செய்ய சட்டரீதியான ஒப்பந்தங்கள் உருவெடுக்கத் தொடங்கின.  இதற்குப் பிறகும் பெருமுதலாளிகள் அம்பானி - பிர்லா குழும, தொழில்நுட்ப ஆலோசகர் சாம் பிட்ரோடா தலைமையில்  கல்வி கமிஷன் போடப்பட்டு கல்வி குறித்து அறிக்கைகள் பெறப்பட்டன. மெக்காலே கல்விக்கொள்கை,  ராஜீவ் காந்தியின் புதிய  கல்விக் கொள்கை,  பிர்லா அம்பானி குழு, சாம் பிட்ரோடா குழு என இதற்கு முன் அமைக்கப்பட்ட அனைத்து குழுக்களின்  ஆலோசனைகளைக் கலந்து இன்றைய சந்தைப் பொருளாதாரத்திற்கு உகந்தார் போன்று ‘ஆர்எஸ்எஸ் ஆய்வகத்தில்’ செய்த கலவைதான் டாக்டர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு உருவாக்கிய புதிய கல்விக் கொள்கை.

பசிக்கு பேதி மாத்திரை?

2015 இல் 6 முதல் 18 வயது உடைய  6.2 கோடி மாண வர்கள் பள்ளியை விட்டு நின்றுள்ளனர். இந்தக் குறைபாடு களை நீக்கப் போவதாக பேசும் அறிக்கைதான்  இன்னும் பல கோடி மாணவர்களை பள்ளியை விட்டு விரட்ட சகுனித் திட்டம் தீட்டியுள்ளது. தற்போதுள்ள 10+2 பள்ளிக்கல்வி முறை 5+3+3+4 என   நான்கு கட்டங்களாக மாற்றப்படும். இதில் மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்புகளில் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு தேர்ச்சி பெறும்  மாணவர் மட்டுமே அடுத்தடுத்த வகுப்புகளுக்கு அனுப்பப்படுவார்கள் என்கிறது வரைவு கல்வி அறிக்கை.  மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதை சொல்லி அரசுப் பள்ளிகளை மூடுவதை தடுக்கிறேன் என்ற பெயரில் புதிய வழிமுறையை இந்த அறிக்கை பேசுகிறது. அதாவது பள்ளிகளை  குறு  மையங்களாக  மாற்றுவது (cluster system).  பத்து மைல் தூரத்திலுள்ள அங்கன்வாடி முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள  பள்ளிகள் , தொகுப்புப் பள்ளிக ளாகக் கருதப்படும்.  இத்தகைய முறை வளர்ந்த  நாடுகளில் நடைமுறையில் உள்ளதுதான். அங்கு சுற்றுவட்டாரத்தில் இருக்கும் கல்வி நிலையங்களின் ஆற்றலை , திறமைக ளைப் பகிர்ந்து கொள்வதற்காக இத்திட்டம் செயல் படுத்தப்படுகிறது. ஆனால் இங்கோ  ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு , கல்வி கொடுத்து வந்த அரசுப் பள்ளிகளை மாணவர், ஆசிரியர் எண்ணிக்கையைக் காரணம் காண்பித்து மூடுவதற்காக கண்டுபிடித்த மாஸ்டர் பிளான் இது.  எழுத்தறிவு பெற்ற சதவீதத்தை, பல நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா 74.25 சதம்தான். இது அண்டை நாடான இலங்கையை விடக் குறைவு. இந்த குறைபாட்டைக் களைந்து இந்தியா முன்னேற ஒற்றைச் சொல்லைக் கூட இந்த அறிக்கை உதிர்க்கவில்லை.

வாய்க்கு சர்க்கரை, வயித்துக்கு நெருப்பு

இந்தியாவில் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை யை 2030-ஆம் ஆண்டுக்குள்  50 சதமாக அதிகரிப்பது எனப் பேசுகிறது புதிய வரைவுக் கொள்கை. நல்லாத்தானே இருக்கு, என உள்ளே போய்ப் பார்த்தால், உயர் கல்வியை அடிப்படையிலேயே சிதைக்கக்கூடிய சீரழிக்கக்கூடிய கேடுகெட்ட திட்டங்களை அறியமுடிகிறது. தற்போது உள்ள உயர்கல்வியின் பன்முகத் தன்மை களை முழுமையாக மாற்றி, ஆராய்ச்சிப் பல்கலைக்கழ கங்கள், கற்பிக்கும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் என மூன்றடுக்கு திட்டத்தை முன்மொழிந்து இருக்கிறார் கள். ஏற்கனவே தில்லி பல்கலைக்கழகத்தில் அறிமுகப் படுத்தப்பட்டு இடையூறுகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் உள்ளான 4 வருட தாராள பட்டப்படிப்பை (libral arts) அறிமுகப்படுத்தப் போவதாக அறிக்கை சொல்கிறது. அரசுப் பல்கலைக்கழகங்களோடு இணைக்கப்பட்டுள்ள கல்லூரி முறையை முழுமையாக 2020க்குள் மாற்றிய மைப்பது, 2020-க்கு பிறகு அனைத்துக் கல்லூரிகளும் தன்னாட்சி பெற்றவையாகவே செயல்பட வைப்பது , 2032 இல்  ஒவ்வொரு கல்லூரியும் தானாகவே தேர்வு வைத்து பட்டம் கொடுக்கும் முறையை  அமலாக்குவது  என வரைவு அறிக்கை பட்டியலிடுகிறது. ஆனால் இத்தகைய நடைமுறை வருவதற்கான அவசியம் ஏன் ஏற்பட்டது என அறிக்கை பேசவில்லை. குறிப்பாக உயர்கல்வியில் தற்போதுள்ள சவால்களை எதிர்கொள்ள கல்வியாளர்களும் பல்வேறு அறிஞர்களும் முன்மொழிந்த ஆய்வுகளையும் அறிக்கைகளையும் இந்தக் குழு கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. மிக முக்கியமாக உலக வர்த்தக அமைப்பு மற்றும் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் இந்திய உயர்கல்வி எதிர்கொண்டு வரும் பிரச்சனைகள் குறித்து எதுவும் பேசாமல் மௌனம் சாதித்துள்ளனர்.

தேசியப் பெருமை, பண்பாடு குறித்து புளங்காகித மடைந்து பக்கம் பக்கமாக எழுதியுள்ள வரைவுக் குழுவினர், அரசு பல்கலைக்கழகங்களோடு இணைந்து (affiliated system) செயல்படும் கல்விமுறையை மேம்படுத்துவதற்கு மாறாக, முழுமையாக ஒழித்துக் கட்ட திட்டம் தீட்டுவது ஏன்? குறிப்பாக இந்தியாவில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட தன்னாட்சிக் கல்வி முறை மிகப்பெரிய அளவில் கல்வித்துறையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாத போது, அது குறித்து முழுமையாகப் பரிசீலிக்காமல் ஒட்டு மொத்த கல்லூரிக் கல்வியையும் தன்னாட்சியாக மாற்றுவது எப்படி அறிவுடைமையாகும்?

தேசிய கல்வி ஆணையம் (ராஷ்டிரிய சிக் ஷா ஆயோக்)

கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் போது,அதை அப்படியே நிராகரித்து விட்டு அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசின் கைக்குள் கொண்டு செல்லும் புதிய திட்டத்தை தீட்டி உள்ளனர். கல்விக்கான இலக்கை உருவாக்குவது, வெளிப்படுத்துவது, செயல்படுத்துவது, மதிப்பீடு செய்வது மற்றும் மறுசீரமைப்பு செய்யும் பொறுப்பு அனைத்தும் ஒரே அமைப்பின் கீழ் கொண்டுவரப்படும். அந்த அமைப்பின் பெயர் தேசிய கல்வி ஆணையம் (RSA). இதன் தலைவராக பிரதமர் செயல்படுவார். பல்வேறுபட்ட மொழிகளையும் கலாச்சா ரங்களையும் வேறுபாடுகளையும் கொண்ட இந்திய நாட்டின் கல்வி முறையை ஒற்றைத்  தலைமையின் கீழ் கொண்டு வரும் அறிவற்ற செயலை கஸ்தூரிரங்கன் குழு முன்மொழிந்துள்ளது ஏன்?  இவற்றுக்கெல்லாம் விடை எளிது. இந்திய அரசியல மைப்புச் சட்டம், நாடாளுமன்ற ஜனநாயகம், மக்கள் நல அரசு போன்றவற்றின் மீது கட்டப்பட்டுள்ள இந்திய உயர் கல்வி முறையை முழுமையாக உடைத்தெறிந்து விட்டு ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்திற்கும் சந்தைப் பொரு ளாதாரத்திற்கும் உகந்த கட்டமைப்பை உயர்கல்வியில் உருவாக்கும் முயற்சியே இது.

என்ன செய்ய வேண்டும்?

தாய்மொழிவழிக் கல்வி நிராகரிப்பு, மும்மொழிக் கொள்கை திணிப்பு, சமூகநீதி அரசியலுக்கு அடிப்படை யான இட ஒதுக்கீட்டு முறையை ஒழித்துக் கட்டுவது, பல் கலைக்கழகங்களின் செனட், சிண்டிகேட்களில் ஆசிரியர், மாணவர்கள் பிரதிநிதித்துவம் குறித்து ஏதும் பேசாதது, தனியார் பள்ளிகள், கல்லூரிகள் தாங்களாவே கட்ட ணத்தை நிர்ணயித்துக் கொள்ள முழு அனுமதி, மாற்றுத் திறனாளிகள், மாற்றுபாலினத்தவர் கல்வி குறித்து சிந்தனை செலுத்தாதது என பல்வேறு குறைபாடுகளை பல்துறை சார்ந்தவர்கள் பட்டியலிட்டுக் கொண்டே வருகின்றனர். புதிய கல்விக் கொள்கை உருவாக்க நியமிக்கப்பட்ட கஸ்தூரிரங்கன் குழுவே விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டு இருக்கும்போது அந்தக் குழுவின் அறிக்கையில் நேர்மை யை எதிர்பார்ப்பது எப்படி?  இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளையும் கலந்தாலோசிக்காமல்; பரந்த அளவில் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் சமூகத்திடமிருந்து கருத்துக ளை ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளாமல் தன்னிச்சையாக முன்மொழியப்பட்டுள்ள வரைவுக் கல்விக் கொள்கையை முழுமையாக நிராகரிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எழுத்துப்பூர்வமாக இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு முன்மொ ழிந்துள்ள வரைவு தேசியக் கொள்கையை முழுமையாக நிராகரிப்போம்! இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை பாதுகாக்கக்கூடிய, பலப்படுத்தக்கூடிய மாற்றுக் கல்வி முறைக்கான போராட்டத்தை முன்னெடுப்போம்!

கட்டுரையாளர் : முன்னாள் மாநிலச் செயலாளர், இந்திய மாணவர் சங்கம்