லதேகர்:
ஜார்க்கண்ட் மாநிலத்தில், 3 மாதமாக ரேசன் பொருட்கள் கிடைக்காத நிலையில், 65 வயது முதியவர் ஒருவர் பட்டினியால் உயிரிழந்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் லதேகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், ராம்சரண் முண்டா (65). இவர், தன் மனைவி மற்றும் மகளுடன் அவரது கிராமத்தில் வசித்துவந்துள்ளார். தினக்கூலி வேலை பார்க்கும் ராம்சரண், ரேசனில் கிடைக்கும் உணவுப்பொருட்களையே பெரிதும் நம்பி இருந்துள்ளார்.ஆனால், நெட்வொர்க் பிரச்சனை காரணமாக ரேசன் கடையில் உள்ள பயோமெட்ரிக் மிஷின் வேலை செய்யவில்லை என்று கூறி, கடந்த 3 மாதமாக ராம்சரண் குடும்பத்திற்கு ரேசன் பொருட்கள் வழங்கப்படாமல் இருந்துள்ளது.
இதன் காரணமாக வயிற்றுப்பாட்டுக்கே வழியில்லாமல், பலநாட்களாக பட்டினி கிடந்த ராம்சரண் முண்டா வியாழனன்று பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளார்.ரேசன் பொருட்கள் கிடைக்காததால் பட்டினியாலேயே ராம்சரண் இறந்தார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. 3 மாத காலமாக ரேசன் பொருட்கள் கிடைக்கவில்லை என்றும், இதனால் கடந்த 4 நாட்களாக ராம்சரண் குடும்பம் ஒட்டுமொத்தமாகவே பட்டினியில் கிடந்ததாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், குடிப்பழக்கம் காரணமாகவே ராம்சரண் இறந்ததாக அதிகாரிகள், கதை ஒன்றை அவிழ்த்து விட்டுள்ளனர்.“பட்டினியால்தான் ராம்சரண் உயிரிழந்தார் என்பது இதுவரை நிரூபிக்கப் படவில்லை. அவருக்கு ஆயுஷ்மான் பாரத் யோஜனா, ரேசன் கார்டு, பென்சன் உள்ளிட்ட அரசு பயன்கள் அனைத்தும் இருக்கின்றன” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.அதேநேரம் இண்டர்நெட் இணைப்பு இல்லாததால், 3 மாதங்களாக ரேசன் பொருட்கள் வழங்கப்படவில்லை என்பதை, அவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர்.