இளம்பிள்ளை சின்னப்பம்பட்டி பிரதான சாலையில் அடுத்தடுத்து அமைந்துள்ள மூன்று அரசு டாஸ்மாக் கடைகளால், அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளதால் கடைகளை மூட பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் இருந்து சின்னப்பம்பட்டி பிரதான சாலையில் அடுத்தடுத்த அரை கிலோ மீட்டர் தூரத்தில் 3 அரசு டாஸ்மாக் கடைகள் உள்ளது. இப்பகுதியில் நகராட்சி பேருந்து நிலையம், வணிக வளாகம், அங்கன்வாடி மையம், கோவில், இரண்டு தனியார் மருத்துவமனைகள், தனியார் வங்கி, ஏடிஎம் மையம் உள்ளிட்ட பல்வேறு கடைகள் அமைந்துள்ளது.
மேலும், அடுத்தடுத்து அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதனால் விசைத்தறியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், இரவு நேரங்களில் பெண்கள் உட்பட பொதுமக்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், இப்பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகளும், மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாகி வருகின்றன.
எனவே இந்த 3 கடைகளையும் உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.