tamilnadu

img

ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது சேலத்தில் தி.வேல்முருகன் குற்றச்சாட்டு

சேலம், ஏப்.4-

தமிழகத்தில் தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாகவும் ஆளும் கட்சிக்கு ஆதரவாகசெயல்பட்டு வருகிறது என சேலத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார். சேலத்தில் வியாழனன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழக காவல்துறை துணையோடும் தேர்தல் அதிகாரிகளின் துணையோடும், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் உதவியில் பணி நியமனம் பெற்றஅரசு அதிகாரிகளின் துணையோடும் தமிழ்நாட்டில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 18 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆளும் கட்சியினரால் வெளிப்படையாக பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது.எந்த ஒரு தொகுதிலும் அதிமுக பிரமுகர் வாகனம், அமைச்சர்கள் வாகனங்களை தேர்தல் ஆணையம் சோதனை செய்வதில்லை. ஏனென்றால் அவர்களின் வாகனத்தில் பணம் கொண்டு செல்வது தெரிவதால் அவர்களின் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்யமுன்வர மாட்டார்கள். இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது என்பதை தெள்ளத்தெளிவாக காட்டுகிறது. மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளும் ஊழல் நிறைந்ததாக துறையாகவே உள்ளது. குறிப்பாக பொதுப்பணித் துறையில் 40 சதவிகித ஊழல். மருத்துவத் துறையிலும், பள்ளி குழந்தைகளுக்கு வழங்கும் முட்டையில் கூட இந்த ஆட்சியில் ஊழல் தான் உள்ளது. ஆகவேஇந்த ஆட்சி ஒரு ஊழல் ஆட்சி அதற்கு இந்த எடப்பாடியே சாட்சி.தமிழ்நாட்டின் உரிமைகளை காவு கொடுக்கும் இந்த ஆட்சி மாணவ, மாணவிகளுக்கு மிகப்பெரிய தண்டனையான நீட் தேர்வு தமிழகத்திற்குள் நுழைய அனுமதித்து உள்ளது. அதுமட்டுமில்லாமல் மக்களுக்கு விரோதமான மக்களுக்கு தேவையில்லாத அனைத்து திட்டங்களும் மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், உயர்மின் கோபுரம் திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் இந்தஆட்சியாளர்கள் அனுமதித்துள்ளனர்.அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி எனவும், கடல் உள்ளளவும், வானம் உள்ளளவும், மண் உள்ளளவும், தமிழ் உள்ளளவும் திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று வசனம்பேசிய மருத்துவர் இராமதாஸ். கிழக்கே உதிக்கிற சூரியன் மேற்கே உதித்தாலும் எந்த ஒரு காலகட்டத்திலும் திராவிட கட்சிகளோடு கூட்டணி வைக்க மாட்டோம் என கூறிய இராமதாஸ் இன்று தன்னுடைய சுயலாபத்திற்காக அதிமுகவிடம் கூட்டணி சேர்ந்துள்ளார் என்றும் அவர் கூறினார்.