சேலம், மே 12-ஆத்தூர் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் இருவர் உயிரழந்தனர். சென்னை அண்ணா நகரில் உள்ள முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் (50). இவர் வெளி நாட்டில் பெட்ரோலிய நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்து வந்தார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த பார்த்திபன் தனதுகுடும்பத்தினருடன் சனிக்கிழமை சேலத்திலுள்ள தனது மனைவியின் தம்பி வீட்டிற்கு காரில் புறப்பட்டனர். கார் ஆத்தூர்முல்லுவாடி புறவழிச்சாலையில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதில் பார்த்திபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது மனைவி கவிதா (42), மகள்கள் தர்சினி (19), தீக்சா (13) ஆகியோர் மீட்கப்பட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் வழியிலேயே தர்சினி உயிரிழந்தார். இதேபோல் சேலம் கொண்டலாம்பட்டி அருகே ஆம்னி கார் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் உத்தமசோழபுரத்தைச் சேர்ந்த விஜயராஜ் (42) என்பவர் படுகாயமடைந்தார். அப்பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயராஜ் சிகிச்சை பலனின்றி சனியன்று இரவு மரணமடைந்தார். இவ்விபத்துகள் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.