சேலம், ஏப்.6-
இதுதொடர்பாக, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் வடக்கு மாநகர குழு சார்பில் மாநகர செயலாளர் என்.பிரவீன் குமார் தலைமையில் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கோவிட் - 19 தடுப்பு மருத்துவ உபகரணங்கள் போதிய அளவில் இல்லை. இதனை உடனடியாக சரி செய்திட வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் மளிகை , மருந்து , காய்கறிகள் போன்றவற்றை வாகனங்களில் எடுத்துச் செல்லலாம் என்கிற உத்தரவு இருந்தும் நடைமுறையில் காவல்துறையினர் அனுமதிக்காத போக்கு உள்ளது . இதனை சரிசெய்ய நடவடிக்கை வேண்டும்.
சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவம் மற்றும் மருத்துவ சிகிச்சை முடிந்து வீட்டிற்கு செல்லும் நோயாளிகளுக்கு உரிய வாகன வசதி ஏற்படுத்தி தர வேண்டும். சேலம் மாநகரில் இல்லம் தேடி காய்கறிகள், மளிகை பொருட்கள் வாங்கிட நடமாடும் விற்பனை கூடங்கள் அதிகப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சேலம் மாநகரில் அரசுடன் இணைந்து பணியாற்ற தாமாக முன்வந்து விருப்பம் தெரிவித்து உள்ள தன்னார்வலர்களை பயன்படுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் தரமாகவும் , முழுமையாக வழங்க வேண்டும், கிருமிநாசினி அனைத்துப் பகுதிகளிலும் தெளித்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் . அரசு கேபிள் டிவி கட்டணம் வசூலிப்பதை 2 மாதத்திற்கு ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.