சேலம், ஏப்.5-
சேலத்தில் அன்புமணி பிரச்சார கூட்டத்தில் கேள்வி கேட்தற்காக தாக்கப்பட்ட செந்தில் உள்ளிட்ட அதிமுகவினர் பலர் அக்கட்சியிலிருந்து விலகி திமுக-வில் தங்களை இணைத்துக் கொண்டனர். தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அன்புமணி இராமதாஸ் ஞாயிறன்று சேலம் சிந்தாமணியூர் கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். இவருடன் கூட்டணி கட்சியை சேர்ந்த அதிமுகவைச் சேர்ந்த மேட்டூர் எம்.எல்.ஏ.வான செம்மலை உள்ளிட்டோர் உடனிருந்தனர். அப்போது, அன்புமணியிடம் அப்பகுதியை சேர்ந்த அதிமுக தொண்டர் செந்தில் என்பவர் “அய்யா, ஐந்து வருடங்களாக நீங்கள்தான் எம்.பி.யாக இருந்தீர்கள், இதுவரை இந்தப் பக்கம் வராத நீங்கள் இப்போது மட்டும் ஓட்டு கேட்டு வருகிறீர்கள்.இங்கே இருக்கின்ற மருத்துவமனை,சாலை வசதிஎன்று மக்களுக்கு எந்த நலத்திட்டங்களையும் செய்யவில்லை. அம்மா ஜெயலலிதா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவை படுகேவலமாக, அதுவும் கொஞ்சமும் நாகரீகமே இல்லாமல் தினந்தோறும் பேசிவிட்டு, எதற்கு எங்கள் அதிமுக கட்சியுடன் கூட்டணி சேர்ந்தீர்கள்…? என்று கேள்வி எழுப்பினர்.இக்கேள்விகளால் அன்புமணி வாயடைத்துப் போனார். அதேநேரம், அவர் அருகில் இருந்த எம்எல்ஏ. செம்மலை யாரும் எதிர்பாராத வகையில் அதிமுக தொண்டர் செந்திலின் கன்னத்தில் பலமுறை அறைந்தார். இதேபோல், பாமகவைச் சேர்ந்தவர்களும் அவரை கடுமையாக தாக்கினர். இதில் பலத்தகாயமடைந்த செந்தில் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இத்தனைக்கும் செந்தில், முதலமைச்சர் எடப்பாடியார் உள்ளிட்ட அதிமுக பிரபலங்களுக்கு நன்கு அறிமுகமானவர். எனவே, எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று அதிமுகவினர் பொறுமை காத்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் கடும் அதிருப்தியில் இருந்த செந்தில் உள்ளிட்ட அதிமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் வெள்ளியன்று திமுக சட்டமன்ற உறுப்பினர் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். இது அதிமுக நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.